ஆன்லைன் கலந்தாய்வு 
செய்திகள்

பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர 13-ந் தேதி ஆன்லைன் கலந்தாய்வு

பாலிடெக்னிக் கல்லூரிகளில் முதல் ஆண்டு சேர்வதற்கு 19 ஆயிரத்து 226 மாணவர்களும், பகுதி நேர பட்டய படிப்பில் சேர 1,212 மாணவர்களும் விண்ணப்பித்துள்ளனர்.

சென்னை:

தமிழ்நாட்டில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மற்றும் பகுதி நேர படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்கு ஜூன் 25-ந் தேதி முதல் ஜூலை 28-ந் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பித்தனர்.

தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தின் நேரடி கட்டுப்பாட்டில் 51 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் இணைப்பு பெற்ற 3 கல்லூரிகளில் உள்ள 18 ஆயிரத்து 120 இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.

2020-21-ம் கல்வி ஆண்டில் 10-ம் வகுப்பில் அனைவரும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டதால் 9-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படும் எனவும், பிற மாணவர்களுக்கு 10-ம் வகுப்பு மதிப்பெண் கணக்கில் எடுக்கப்படும் எனவும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி பாலிடெக்னிக் கல்லூரிகளில் முதல் ஆண்டு சேர்வதற்கு 19 ஆயிரத்து 226 மாணவர்களும், பகுதி நேர பட்டய படிப்பில் சேர 1,212 மாணவர்களும் விண்ணப்பித்துள்ளனர்.

இவர்களுக்கான தர வரிசை பட்டியல் அந்தந்த பாலிடெக்னிக் கல்லூரிகளில் தயாரிக்கப்பட்டு வெளியிடப்படும். சிறப்பு பிரிவான விளையாட்டு மாணவர்களுக்கு நாளை (12-ந் தேதி) ஆன்லைன் மூலம் சான்றிதழ் சரி பார்க்கப்படுகிறது.

விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீட்டு இடங்களில் சேர 435 பேர் விண்ணப்பித்து உள்ளனர். 13-ந் தேதி முதல் சிறப்பு பிரிவு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடக்கிறது.

அதனைத் தொடர்ந்து பொதுப்பிரிவு மாணவர்கள் கவுன்சிலிங் 24-ந் தேதி வரை விண்ணப்பித்த கல்லூரிகளில் ஆன்லைன் மூலம் நடைபெறும் என தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT