கோவை மத்திய ஜெயில் நுழைவாயில் 
செய்திகள்

கோவை மத்திய ஜெயிலில் போலீஸ் அதிரடி சோதனை

கைதிகள் போதைப்பொருள் பயன்படுத்துவதாக புகார் வந்ததையடுத்து கோவை மத்திய ஜெயிலில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

மாலை மலர்

கோவை:

தமிழகத்தில் உள்ள ஜெயிலில் அடைக்கப்பட்டிருக்கும் கைதிகள் சரளமாக செல்போன் பயன்படுத்துவதாகவும், போதைப்பொருள் பயன்படுத்துவதாகவும் தொடர்ந்து புகார்கள் வந்தது.

அதன்பேரில் இன்று தமிழகம் முழுவதும் உள்ள ஜெயில்களில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதேபோல கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள மத்திய ஜெயிலிலும் சோதனை நடத்தப்பட்டது.

இந்த ஜெயிலில் தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் என 2,300 பேர் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் பெண்கள் சிறையில் 90 கைதிகள் வைக்கப்பட்டுள்ளனர்.

இங்கு இன்று காலை ரேஸ்கோர்ஸ் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேம்தாஸ் தலைமையில் 100 போலீசார் அதிரடியாக சென்று சோதனையில் ஈடுபட்டனர். கைதிகள் அறை, கழிவறை உள்ளிட்ட இடங்களில் அவர்கள் சல்லடை போட்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். புகையிலை, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் எதுவும் அங்கு உள்ளனவா? என சோதனையிட்டனர். ஆனால் அவ்வாறு எதுவும் சிக்கவில்லை.

கைதிகள் சட்ட விரோதமாக செல்போன் மூலம் வெளியிடங்களுக்கு பேசி வருகிறார்களா? எனவும் சோதனை நடத்தப்பட்டது. இதிலும் செல்போன்கள் எதுவும் சிக்கவில்லை. காலை 6 மணிக்கு தொடங்கிய இந்த சோதனை 8 மணி வரை நீடித்தது.

போலீசாரின் இந்த திடீர் சோதனையால் கைதிகளிடையே பரபரப்பு நிலவியது.