தற்கொலை 
செய்திகள்

திருவேற்காடு அருகே திருமணமான 24 நாட்களில் புதுப்பெண் தற்கொலை

திருமணமான 24 நாட்களில் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். முன்னதாக விருப்பமில்லாத திருமணத்தை செய்து வைத்ததால் இந்த விபரீத முடிவை எடுப்பதாக தந்தைக்கு வீடியோ அனுப்பி உள்ளார்.

மாலை மலர்

பூந்தமல்லி:

திருவேற்காடு கஸ்தூரிபாய் அவென்யூ பகுதியை சேர்ந்தவர் ஜெயராமன் (வயது 25). தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ரக்சனா (21) என்பவருக்கும் கடந்த மாதம் 26-ந் தேதி திருமணம் நடைபெற்றது.

நேற்று முன்தினம் கணவர் வீட்டில் உள்ள அனைவரும் வேலைக்கு சென்று விட்டனர். ரக்சனா மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். இரவு அவரது மாமியார் வசந்தா, வீட்டுக்கு திரும்பி வந்தார். கதவு உள்பக்கமாக சாத்தப்பட்டு இருந்தது.

நீண்டநேரம் கதவை தட்டியும் ரக்சனா கதவை திறக்கவில்லை. இதனால் அக்கம், பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அங்கு ரக்சனா, தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்துவந்த திருவேற்காடு போலீசார், ரக்சனா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் நடத்திய விசாரணையில், ரக்சனா தற்கொலைக்கு முன்பு தனது தந்தையின் செல்போனுக்கு வீடியோ ஒன்று அனுப்பி இருப்பது தெரிந்தது.

அதில் அவர், தனக்கு விருப்பம் இல்லாமல் திருமணம் செய்து வைத்ததால் தற்கொலை முடிவை எடுத்துள்ளேன் என கூறி இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். தந்தைக்கு அந்த வீடியோவை அனுப்பி விட்டு அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து இருப்பது தெரிந்தது.

இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து ரக்சனாவுக்கு விருப்பம் இல்லாமல் அவருக்கு கட்டாய திருமணம் நடைபெற்றதா?. அவர் வேறு யாரையாவது காதலித்து வந்தாரா?. அவரது சாவுக்கு வேறு ஏதேனும் காரணமா? என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

ரக்சனாவுக்கு திருமணமாகி 24 நாட்களே ஆவதால் இதுபற்றி ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.

மதுரவாயல் கண்ணன் நகர், 3-வது தெருவை சேர்ந்தவர் கார்த்தி (24). எலக்ட்ரீசியன். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ரேணுகா (20) என்பவருக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

கார்த்திக்கு குடிப்பழக்கம் இருப்பதாக தெரிகிறது. ரேணுகாவின் தந்தை குடிப்பழக்கம் உடையவர் என்பதால் தான் கஷ்டப்பட்டதாகவும், அதனால் நீ குடிக்க கூடாது என்ற நிபந்தனையுடன் கார்த்தியை திருமணம் செய்ததாகவும் தெரிகிறது.

ஆனால் அதையும் மீறி கார்த்தி குடித்துவிட்டு வீட்டுக்கு வந்ததால், தந்தையைபோல் கணவரும் குடிப்பழக்கத்துக்கு அடிமையாகிவிடுவாரோ? என்ற விரக்தியில் ரேணுகா, நேற்று காலை கணவர் மீன்வாங்க சென்றிருந்த நேரத்தில் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுபற்றி மதுரவாயல் போலீசார் விசாரித்து வருகின்றனர். ரேணுகாவுக்கு திருமணமாகி 3 மாதங்களே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணையும் நடைபெறுகிறது.