பெட்ரோல் குண்டு வீசப்பட்ட இடம். 
செய்திகள்

தூத்துக்குடியில் தியேட்டர் மீது பெட்ரோல் குண்டு வீச்சு- 5 பேர் கும்பலுக்கு வலைவீச்சு

தூத்துக்குடியில் தியேட்டர் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தொடர்பாக தென்பாகம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

தூத்துக்குடி:

தூத்துக்குடி போல்டன்புரத்தில் ஒரு தியேட்டர் இயங்கி வருகிறது. அங்கு தற்போது புதியதாக வெளிவந்த திரைப்படம் திரையிடப்பட்டுள்ளது.

நேற்று இரவு 10 மணிக்கு அந்த தியேட்டருக்கு 5 பேர் கொண்ட ஒரு கும்பல் வந்தனர். அவர்கள் அங்குள்ள ஊழியர்களிடம் படம் பார்ப்பதற்காக டிக்கெட் கேட்டுள்ளனர்.

அப்போது அவர்கள் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் முககவசம் அணியாமல் வந்ததாலும் அவர்களுக்கு டிக்கெட் கொடுக்க ஊழியர் மறுத்துள்ளார். இதில் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அங்கிருந்தவர்கள் அவர்களை சமாதானப்படுத்தி கலைந்து போக வைத்தனர்.

இந்த சம்பவத்தால் ஆத்திரமடைந்த அந்த கும்பல் சிறிது நேரத்திற்கு பின்னர் மீண்டும் அந்த தியேட்டருக்கு வந்தனர். அப்போது அவர்கள் தாங்கள் வைத்திருந்த பெட்ரோல் குண்டை தியேட்டர் மீது வீசினர்.

இதனால் வளாகத்தில் தீப்பிடித்து கடும்புகை கிளம்பியது. ஆனால் அதிர்ஷ்டவசமாக அப்பகுதியில் பொதுமக்கள் இல்லாததால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சம்பவ இடத்திற்கு தென்பாகம் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இதில் தூத்துக்குடியை சேர்ந்த அரவிந்த் உள்ளிட்ட 5 பேர் பெட்ரோல் குண்டை வீசி சென்றது தெரியவந்தது.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பி ஓடிய கும்பலை தேடி வருகின்றனர்.