பெட்ரோல் குண்டுவீச்சில் சேதமடைந்த கார். 
செய்திகள்

கோவை அருகே இந்து மகாசபா நிர்வாகி கார் மீது பெட்ரோல் குண்டு வீச்சு

கோவை அருகே இந்து மகாசபா நிர்வாகி கார் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

கவுண்டம்பாளையம்:

கோவை துடியலூர் அருகே உள்ள பன்னிமடையை சேர்ந்தவர் சுபாஷ் (வயது 45). இவர் அகிலபாரத இந்து மகாசபாவில் மாநில இளைஞர் அணி செயலாளராக உள்ளார்.

சம்பவத்தன்று இவர் தனது வீட்டில் படுத்து தூங்கி கொண்டு இருந்தார். இரவு 11 மணியளவில் யாரோ மர்மநபர் சுபாஷ் வீட்டு முன்பு நிறுத்தி இருந்த கார் மீது பெட்ரோல் குண்டை வீசி விட்டு சென்றனர். இந்த சத்தம் கேட்டு வெளியே வந்த சுபாஷ் கார் தீ பிடித்து எரிவது கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தார்.

இது குறித்து சுபாஷ் தடாகம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் வீட்டில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் ஹெல்மெட் அணிந்து நடந்து வரும் 2 மர்மநபர்கள் கார் மீது பெட்ரோல் குண்டை வீசி விட்டு செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. இதனை வைத்து போலீசார் அகில பாரத இந்து மகாசபா நிர்வாகி கார் மீது பெட்ரோல் குண்டை வீசி சென்ற மர்மநபர்களை தேடி வருகிறார்கள்.

ஏற்கனவே சுபாஷ் தனது காரில் வீட்டிற்கு வரும் வழியில் யாரோ மர்மநபர்கள் கார் மீது பெட்ரோல் குண்டை வீசி அவரை கொலை செய்ய முன்றனர். மேலும் அவரது வீட்டில் வளர்க்கும் நாய்களையும் மர்மநபர்கள் வி‌ஷம் வைத்து கொன்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.