மரணம் 
செய்திகள்

பெரியகுளம் அருகே காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட வாலிபர் பலி

பெரியகுளம் அருகே சோத்துப்பாறை அணையில் குளிக்கச் சென்ற வாலிபர் காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.

மாலை மலர்

பெரியகுளம்:

தேனி மாவட்டம் பெரியகுளம் தெற்கு மறவர் தெருவைச் சேர்ந்த பொன்னுத்துரை மகன் செல்லராம் (வயது 36). தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவருடன் பணிபுரிந்து வந்த நண்பர்கள் அனைவரையும் ஊரடங்கு தளர்வுக்கு பிறகு சந்திக்க விரும்பி அனைவரும் நேற்று பெரியகுளம் சோத்துப்பாறை அணைக்கு வந்தனர்.

அவர்கள் அசைவ உணவு மற்றும் மது பாட்டில்களுடன் சோத்துப்பாறை அணை பகுதிக்கு வந்தனர். மாலையில் ஒன்று கூடிய அவர்கள் மது குடித்து பின்னர் உணவருந்தி விட்டு அதே பகுதியில் இளைப்பாறிக் கொண்டு இருந்தனர். சாரல் மழை பெய்து கொண்டு இருந்ததால் அணை பகுதியில் தண்ணீர் அதிக அளவு சென்று கொண்டு இருந்தது.

இதனால் அணையில் குளிப்பதற்காக செல்லராம், ராமசாமி (40), அழகர், செல்லப்பாண்டி உள்ளிட்ட 6 பேர் இறங்கினர். திடீரென நீர் வரத்து அதிகரித்து வெள்ளம் பெருக்கெடுத்தது. இதனால் அவர்கள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டனர்.

ராமசாமி கூச்சலிடவே மற்ற நண்பர்கள் ஓடி வந்து அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் இது குறித்து பெரியகுளம் தீயணைப்பு துறையினருக்கும் உடனடியாக தகவல் தெரிவித்தனர். அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து ஆற்றில் அடித்து செல்லப்பட்டவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். இரவு வெகுநேரம் ஆகி விட்டதால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டது. இருந்த போதும் 5 பேரை பத்திரமாக மீட்டனர்.

மீண்டும் இன்று அதிகாலை தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போது, மேல் மங்கலம் முத்தையா கோவில் அருகே வராக நதி தடுப்பணையில் செல்லராம் சடலமாக கிடந்தார். அவரது உடலை மீட்டு பெரியகுளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். இது குறித்து தென்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.