குண்டும், குழியுமாக காட்சி அளிக்கும் பேச்சிப்பாறை- கோதையார் சாலையை காணலாம். 
செய்திகள்

குண்டும், குழியுமாக காட்சி அளிக்கும் பேச்சிப்பாறை- கோதையார் சாலை

10 ஆண்டுகளாக குண்டும், குழியுமாக காட்சி அளிக்கும் பேச்சிப்பாறை- கோதையார் சாலையால் பொதுமக்கள் அவதிக்கு ஆளாகி உள்ளனர். எனவே போர்க்கால அடிப்படையில் சீரமைக்க மலைவாழ் மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

அருமனை:

குமரி மாவட்டம் விளவங்கோடு தாலுகா மலையோர கிராமங்களுக்கு செல்ல பேச்சிப்பாறை -கோதையார் சாலை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த சாலையாகும். இந்த பகுதியில் ஏராளமான மலைவாழ் மக்கள் வசித்து வருகிறார்கள். மேலும் அரசு ரப்பர் கழகம், கோதையார் மின் உற்பத்தி நிலையம், வன சரக அலுவலகங்கள் உள்ளன.

மலையோர கிராமங்களான வலிய ஏலா, மருதம்பாறை, குற்றியார், சிற்றார், மோதிரமலை உள்ளிட்ட கிராம மக்கள் இந்த சாலை வழியாக பயணம் செய்துதான் அருமனை, குலசேகரம் வந்து தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்கி செல்கின்றனர். அவர்கள் நகர்ப்புறங்களுக்கு வந்து செல்ல பேச்சிப்பாறை வரை மலைப்பகுதியில் இந்த ஒரே ஒரு சாலை மட்டுமே உள்ளது.

இந்த சாலை கடந்த 10 ஆண்டுகளாக பராமரிக்கப்படாமல் உருக்குலைந்து போய் உள்ளது. தார் சாலை என்பதற்கான அடையாளங்களே இல்லாமல் குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. தற்போது மலைப்பகுதியில் பெய்து வரும் மழை காரணமாக சாலை சேறும் சகதியுமாக காணப்படுகிறது. வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர். இதனால், பொதுமக்கள் போக்குவரத்துக்கு வழி இல்லாமல் பெரும் சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர்.

எனவே பொதுமக்கள், அரசு ரப்பர் கழக தொழிலாளர்கள், கோதையார் மின் உற்பத்தி நிலைய தொழிலாளர்கள் ஆகியோரது நலனை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். பல்லாங்குழிகளாக காட்சி அளிக்கும் பேச்சிப்பாறை- கோதையாறு சாலையை உடனே சீரமைக்க வேண்டும் என்று மலைவாழ் மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.