கோவை:
கோவை ராமநாதபுரம் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் மோகன்ராஜ் (வயது41). இவர் அங்கு பட்டுப்புடவை கடை வைத்து மொத்த வியாபாரம் செய்து வருகிறார். சம்பவத்தன்று கடையில் இவருடைய தந்தை திருஞானசம்பந்தம் (75) இருந்தபோது 3 பெண்கள் உள்பட 5 பேர் கடைக்கு வந்தனர்.
அவர்கள பட்டுப்புடவை வேண்டும் என்று கேட்டதால், திருஞானசம்பந்தம் பல்வேறு ரகங்களில் பட்டுப்புடவைகளை எடுத்துக் காட்டினார். அதை வாங்கி பார்த்த அவர்கள் எதுவும் பிடிக்கவில்லை பிறகு வருகிறோம் என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றனர்.
சிறிது நேரம் கழித்து மோகன்ராஜ் கடைக்கு வந்து பட்டுப்புடவைகளின் எண்ணிக்கையை சரி பார்த்தார். அப்போது 6 பட்டுப்புடவைகள் காணாமல் போனது தெரியவந்தது. உடனே அவர், அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தார் அதில் பெண்கள் உள்பட 5 பேர் கொண்ட கும்பல் விலை உயர்ந்த 6 பட்டுப் புடவைகளை திருடியது தெரியவந்தது.
இது குறித்த புகாரின் பேரில் ராமநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அவர்கள், கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்த்து ஆட்களை அடையாளம் கண்டனர். மேலும் அவர்களின் செல்போன் சிக்னல்களை ஆய்வு செய்ததில் அவர்கள் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பதுங்கி இருப்பது தெரிய வந்தது.
உடனே நேற்று முன்தினம் இரவு போலீசார் அங்கு விரைந்து சென்று பட்டுப்புடவைகளை திருடிய 3 பேரை மடக்கி பிடித்தனர். விசாரணை யில், அவர்கள் மதுரையை சேர்ந்த முருகன் (வயது 51), தேனியை சேர்ந்த மணிகண்டன் (41), தனலட்சுமி (40) என்பது தெரியவந்தது. உடனே அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மேலும் 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.