சென்னை:
அ.தி.மு.க.வின் செய்தித் தொடர்பாளராக இருந்த பெங்களூர் புகழேந்தி கடந்த ஜூன் மாதம் 14-ந்தேதி கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
இதுகுறித்து அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டறிக்கை வெளியிட்டனர்.
இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள கருத்து தன் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் உள்ளதாகவும், எனவே ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மீது அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சென்னையில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ., மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் புகழேந்தி வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில், ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இன்று (செவ்வாய்க்கிழமை) நேரில் ஆஜராக வேண்டும் என்று ஏற்கனவே அவர்களுக்கு சிறப்பு கோர்ட்டு சம்மன் அனுப்பியிருந்தது. இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதி அலீசியா முன்பு விசாரணைக்கு வந்தபோது, அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் சார்பில் ஆஜரான வக்கீல், ஒரு மனு தாக்கல் செய்தார்.
அதில் சட்டசபை நடந்து கொண்டிருப்பதால் இருவரும் நேரில் ஆஜராக முடியவில்லை. அவர்கள் எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் துணைத் தலைவர் என்பதால் ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டி உள்ளதாகவும் தெரிவித்தனர். அதே போல இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்துள்ள மனு ஐகோர்ட்டில் வரும் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வர உள்ளது என்று கூறப்பட்டு இருந்தது.
இந்த மனுவை ஏற்க மறுத்த நீதிபதி, நேரில் ஆஜராகாமல் இருப்பதற்காக மனுதாரர் கூறும் காரணம் நியாயமானது என்றாலும், அவதூறு வழக்கில் முதல் விசாரணையில் நேரில் ஆஜராக வேண்டும். அதில் விலக்கு அளிக்க முடியாது. எனவே இந்த மனுவை தள்ளுபடி செய்து விசாரணையை வருகிற செப்டம்பர் 14-ந்தேதிக்கு தள்ளி வைக்கிறேன். அன்று இருவரும் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.
இதையும் படியுங்கள்... கே.டி.ராகவன் ராஜினாமா- அண்ணாமலை வெளியிட்ட விளக்கமான அறிக்கை