அருள் ஜாக்சன் 
செய்திகள்

சிறுமிக்கு பாலியல் தொல்லை: கைதான போலீஸ் ஏட்டு, கள்ளக்காதலி ஜெயிலில் அடைப்பு

பணகுடி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் குறித்து கைது செய்யப்பட்ட போலீஸ் ஏட்டு மற்றும் கள்ளக்காதலியை போலீசார் சிறையில் அடைத்தனர்.

மாலை மலர்

பணகுடி:

நெல்லை மாவட்டம் பணகுடி போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வருபவர் அருள் ஜாக்சன். இவரது சொந்த ஊர் கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் ஆகும். இவருக்கும் இவரது மனைவிக்கும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

இவர் கொடைக்கானல் குண்டுபட்டி கிராமத்தைச் சேர்ந்த செல்வி என்ற பெண்ணை, குழந்தையுடன் அழைத்து வந்து பணகுடியில் குடும்பம் நடத்தி வந்துள்ளார்.

செல்வியின் மகளான 13 வயது சிறுமிக்கு அவர் பாலியல் தொந்தரவு கொடுத்து வருவதாக குழந்தைகள் பாதுகாப்பு குழுமத்தின் அலுவலர் சர்ச்சிலுக்கு புகார் வந்தது.

இதுகுறித்து வள்ளியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் குழந்தைகள் பாதுகாப்பு குழுமத்தின் அலுவலர் சர்ச்சில் புகார் அளித்தார்.

அதன்பேரில் ஏட்டு அருள் ஜாக்சன் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த செல்வி ஆகியோர் மீது வள்ளியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் ஏட்டு அருள் ஜாக்சன், செல்வி ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து வள்ளியூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.