பழனி:
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் பழனியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. குளத்து ரோடு ரவுண்டானா பகுதியில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு நகர தலைவர் மாரிக்கண்ணு தலைமை தாங்கினார். மாநில துணை செயலாளர் பால சந்திரபோஸ், மாவட்ட செயலாளர் பாலாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தின் போது மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்ட மசோதாக்களை திரும்பப்பெற வேண்டும், விவசாயிகளின் நலனை பாதுகாக்க வேண்டும், போராடி வரும் விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று கூறி கோஷங்கள் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் சிலர் காய்கறி மாலைகளை கழுத்தில் அணிந்தபடி கோஷங்கள் எழுப்பினர்.
இதே போல் வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் பழனி ஆர்.எப்.ரோட்டில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட செயலாளர் நூருல் ஹுதா தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தின்போது திருத்த சட்ட மசோதாவை திரும்ப பெற வேண்டும் என்றும், மத்திய அரசுக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர்.