கைது 
செய்திகள்

திசையன்விளையில் பெயிண்டர் கொலையில் நண்பர் கைது

திசையன்விளையில் மது போதையில் ஏற்பட்ட தகராறில் பெயிண்டரை கொலை செய்ததாக கைதான அவரது நண்பர் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

மாலை மலர்

திசையன்விளை:

திசையன்விளை அருகே உள்ள நவ்வலடியை சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மகன் ரமேஷ் (வயது 32).பெயிண்டர். இவருக்கு திருமணம் ஆகவில்லை.

நேற்று இரவு திசையன்விளை-நவ்வலடி சாலையில் உள்ள தனியார் வங்கி அருகே ரமேஷ் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்திவிட்டு தனது பிறந்தநாளை கொண்டாடினார். அப்போது அவர்களுக்குள் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதில் ரமேசின் நண்பரான திசையன்விளை சுந்தர விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த முருகானந்தம்(21) என்பவர் இரும்பு கம்பியால் ரமேசை அடித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட் டார்.

உடனே அவரது நண்பர்கள் அங்கிருந்த தனியார் ஆஸ்பத்திரிக்கு அவரை கொண்டு சென்றனர். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். தகவல் அறிந்த திசையன்விளை போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாங்குநேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து இன்ஸ்பெக்டர் ஜமால் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி முருகானந்தத்தை கைது செய்தனர். அவர் போலீசில் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:-

நானும், ரமேசும் ஒன்றாக தான் பெயிண்டிங் வேலைக்கு செல்வோம். நேற்று அவருக்கு பிறந்தநாள் என்பதால் எங்களுக்கு மது விருந்து அளித்தார். நண்பர்கள் அனைவரும் ஒன்றாக மது அருந்தி கொண்டிருந்தோம்.

அப்போது போதையில் எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த நான் இரும்பு கம்பியால் ரமேசின் தலையில் அடித்தேன். அதில் அவர் சரிந்து விழுந்தார். உடனே நான் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டேன் என்று கூறினார்.