ராமேசுவரம்:
இலங்கையில் இருந்து கள்ளத்தனமாக ஒருவர் தனுஷ்கோடி கடற்கரையில் வந்து இறங்கியுள்ளதாக கியூ பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து நேற்று அதிகாலையில் தனுஷ்கோடி கடற்கரைக்கு விரைந்து சென்ற கியூ பிரிவு இன்ஸ்பெக்டர் மகேசுவரி, சப்-இன்ஸ்பெக்டர்கள் வெங்கடேசபெருமாள், முஸ்தபா உள்ளிட்டோர் ஒத்ததாழை கடற்கரையில் நடந்து வந்து கொண்டிருந்தவரை பிடித்து ராமநாதபுரத்தில் உள்ள கியூ பிரிவு போலீஸ் அலுவலகத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் இலங்கை தலைமன்னாரை சேர்ந்த முஜிபூர் ரகுமான் (வயது 35) என்பதும், இவர் மனைவி குழந்தைகளுடன் மண்டபம் அகதிகள் முகாமில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வந்ததாகவும், இவர் மட்டும் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு ராமேசுவரத்தில் இருந்து கள்ளத்தனமாக படகு மூலம் இலங்கைக்கு தப்பிச் சென்று அங்கு சிறையில் இருந்து வந்ததுடன் தண்டனை முடிந்து மீண்டும் அங்கிருந்து கள்ளத்தனமாக படகில் ஏறி, நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரத்தை சேர்ந்த ஒரு படகில் ஏறி தனுஷ்கோடி கடற்கரையில் வந்து இறங்கியதும் தெரியவந்துள்ளது.
இந்திய கடல் எல்லைப் பகுதியில் இருந்து இந்த இலங்கை அகதியை ஏற்றிவந்த ராமேசுவரத்தை சேர்ந்த மீன்பிடி படகு எது மற்றும் மீனவர்கள் யார்? என்பது குறித்து கியூ பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் இலங்கையில் இருந்து கள்ளத்தனமாக படகு மூலம் தப்பி வந்த இவர் உண்மையிலேயே மனைவி மற்றும் குடும்பத்தினரை சந்திக்க வந்தாரா அல்லது வேறு ஏதேனும் பொருட்களை கடத்தி செல்ல திட்டமிட்டு வந்தாரா என்பது குறித்தும் கியூ பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.