முப்படை தலைமை தளபதி பிபின் ரவத் 
செய்திகள்

அருணாசலபிரதேச எல்லையில் முப்படை தலைமை தளபதி பிபின் ரவத் 2-வது நாளாக ஆய்வு

அருணாசலபிரதேசத்தில் உள்ள எல்லை பகுதிகளில், ராணுவத்தின் தயார்நிலை குறித்து இந்திய முப்படை தலைமை தளபதி பிபின் ரவத் 2-வது நாளாக ஆய்வு மேற்கொண்டார்.

மாலை மலர்

இடாநகர்:

முப்படை தலைமை தளபதி பிபின் ரவத், கடந்த வெள்ளிக்கிழமை அசாம் மாநிலம் சாபுவாவில் உள்ள டிஞ்சன் விமானப்படை நிலையத்துக்கு சென்றார். நேற்று முன்தினம் அங்கிருந்து 2 நாள் பயணமாக அருணாசலபிரதேசத்துக்கு சென்றார்.

அங்கு இந்திய-சீன எல்லை கோட்டை ஒட்டி அமைந்துள்ள இந்திய விமான தளங்களை நேரில் பார்வையிட்டார். எல்லையை ஒட்டி உள்ள பல்வேறு பகுதிகளை ஹெலிகாப்டரில் பறந்து சென்று ஆய்வு செய்தார்.

இந்த நிலையில், அருணாசலபிரதேசத்தில், ராணுவத்தின் தயார்நிலை குறித்து பிபின் ரவத் நேற்று 2-வது நாளாக ஆய்வு மேற்கொண்டார். எல்லை கோடு அருகே உள்ள பல்வேறு தளங்களுக்கு நேரில் சென்றார்.

ராணுவ வீரர்கள் மற்றும் இந்தோ-திபெத் எல்லைப்படை போலீசாருடன் உரையாடினார். கண்காணிப்பு பணிகளுக்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்ததற்காக வீரர்களுக்கு பாராட்டு தெரிவித்தார். எந்த சவாலையும் சந்திக்க பாதுகாப்பு படைகள் தயார்நிலையில் இருப்பது குறித்து திருப்தி தெரிவித்தார்.

ராணுவ வீரர்களின் மனஉறுதி தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக பிபின் ரவத் கூறினார். எந்த சவாலையும் சந்தித்து வெற்றியை உறுதி செய்யும் வகையில் இருப்பதற்கு திருப்தி தெரிவித்தார். தொடர்ந்து விழிப்புடன் இருக்குமாறு படையினரை கேட்டுக்கொண்டார்.

முப்படை தலைமை தளபதியாக பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்த நாளில் அவர் இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளார். லடாக் எல்லையில் சீன ராணுவத்துடன் 8 மாதங்களாக மோதல்போக்கு நிலவி வரும் நிலையில், அவர் இந்த ஆய்வில் ஈடுபட்டார்.