நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே உள்ள செல்லியாயிபாளையம் பகுதியை சேர்ந்தவர் கொண்டாயி (வயது 60). இவரது உறவினர் மாயவன் (58), கூலித்தொழிலாளி. இவர்கள் இருவரும் அக்காள், தம்பி முறை உள்ளவர்கள் ஆவார்கள்.
இவர்களுக்கு இடையே நிலத்தகராறு இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த 2016-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 5-ந் தேதி வீட்டிற்கு முன்பு உள்ள காலி நிலத்தில் கழிப்பிடம் கட்டுவது தொடர்பாக இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் கொண்டாயியை கத்தியால் குத்தி தம்பி மாயவன் கொலை செய்தார்.
இது தொடர்பாக புதுச்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயவனை கைது செய்தனர். இந்த வழக்கு நாமக்கல் மகளிர் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.
இதில் குற்றம்சாட்டப்பட்ட மாயவனுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார். இதையடுத்து சிறை தண்டனை விதிக்கப்பட்ட மாயவன், கோவை சிறைக்கு போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டார்.