திசையன்விளை:
நெல்லை மாவட்டம் திசையன்விளை அழகுவேல் பஜார், ஓ.எஸ். பஜார்களில் உள்ள 3 கடைகளில் நைட்டி அணிந்த மர்ம நபர் பூட்டை உடைத்து கடைகளில் இருந்த ரூ. 51 ஆயிரம் மற்றும் விலை உயர்ந்த செல்போன் ஆகியவற்றை கடந்த 4-ந் தேதி இரவு கொள்ளையடித்து சென்றார்.
இது குறித்து திசையன்விளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தடயவியல் நிபுணர்களும் வந்து கைரேகைகளை பதிவு செய்தனர்.
மேலும் பஜார் பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. காமிராக்களில் பதிவாகி உள்ள காட்சிகளை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்தனர். அதில் இரவில் நைட்டி மற்றும் முகமூடி அணிந்து கொள்ளையில் ஈடுபட்ட நபர் பகலில் அந்த பகுதியில் லுங்கி மற்றும் கட்டம் போட்ட சட்டை அணிந்து நோட்டமிட்ட காட்சி பதிவாகி இருந்தது.
அந்த காட்சிகளை வைத்து போலீசார் விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது நைட்டி அணிந்து திருட்டில் ஈடுபட்டது நெல்லை மேலப்பாளையத்தை சேர்ந்த ஷேக்மதார் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை இன்று கைது செய்தனர்.