கொச்சி மெட்ரோ ரெயில் 
செய்திகள்

கொச்சி மெட்ரோ ரெயில் கட்டணத்தை குறைக்க முடிவு

மெட்ரோ ரெயில் பயணிகள் பலரும் ரெயில் கட்டணம் அதிகமாக இருப்பதாகவும், அதனை குறைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

மாலை மலர்

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் கொச்சியில் மெட்ரோ ரெயில் போக்குவரத்து நடந்து வருகிறது.

கொச்சி மாநகர பகுதியில் தினமும் 25 ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் 1000-க்கும் மேற்பட்ட பயணிகள் தினமும் பயணம் செய்து வருகிறார்கள்.

கொச்சி மாநகரின் ஒரு முனையில் இருந்து மறுமுனைக்கு செல்ல ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும் ஒரு ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.

மெட்ரோ ரெயில் பயணிகள் பலரும் ரெயில் கட்டணம் அதிகமாக இருப்பதாகவும், அதனை குறைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து கொச்சி மெட்ரோ ரெயில் நிர்வாகம் இது தொடர்பாக ஆய்வு நடத்தியது.

இந்த ஆய்வில் 77 சதவீதம் பேர் கட்டணத்தை குறைக்க வேண்டும் எனக்கூறியிருந்தனர். இதையடுத்து மெட்ரோ ரெயில் நிர்வாகம் இது குறித்து ஆலோசனை நடத்தியது.

இது பற்றி கொச்சி மெட்ரோ ரெயில் மேலாண்மை இயக்குனரும், கேரள மாநில முன்னாள் போலீஸ் டி.ஜி.பி.யுமான லோக் நாத் பெக்ரா கூறியதாவது:-

கொச்சி மெட்ரோ ரெயிலில் பயணம் செய்யும் பயணிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனை மேலும் அதிகரிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

ரெயில் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று பயணிகள் பலர் வலியுறுத்தி உள்ளனர். அவர்களின் கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு வருகிறது. விரைவில் ரெயில் கட்டண குறைப்பு குறித்து அறிவிக்கப்படும்.

தற்போது ரெயிலில் மனநலம் பாதிக்கப்பட்டோர் இலவசமாக பயணம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். அவர்களுடன் வரும் பாதுகாவலருக்கு வழக்கமான கட்டணத்தில் இருந்து 50 சதவீத தள்ளுபடி வழங்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.