நாமக்கல்:
தமிழ்நாடு கிராம சுகாதார செவிலியர் சங்கம் சார்பில் நாமக்கல் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள இணை இயக்குனர் (சுகாதார பணிகள்) அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாநில இணைச்செயலாளர் நந்தினி தலைமை தாங்கினார்.
மாவட்ட தலைவர் ஜெயக்கொடி, மாவட்ட பொருளாளர் பூங்கொடி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயலாளர் உஷா, மாநில துணை தலைவி சாரதா ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தின் கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில் சி.பி.எஸ். முறையை ரத்து செய்ய கோரியும், ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும் கம்ப்யூட்டர் ஆபரேட்டர் பணியமர்த்த கோரியும் கோஷங்கள் எழுப்பப்பட்டது. மேலும் ஆய்வுக் கூட்டங்களை 5 மணிக்கு மேல் நடத்துவதை கைவிட வேண்டும், பழுதடைந்த குடியிருப்புகளுக்கு வாடகை வசூல் செய்வதை கைவிட வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செவிலியர்கள் கோஷங்களை எழுப்பினர்.