திமுக 
செய்திகள்

அடுத்த மாதம் தேர்தல்: மேல்சபை எம்.பி. பதவிக்கு தி.மு.க.வில் 300 பேர் ஆர்வம்

பொதுவாக தி.மு.க.வில் ராஜ்யசபா எம்.பி. பதவி என்பது கட்சியில் உள்ள முக்கிய நபர்களுக்குத்தான் கிடைத்து வருகிறது.

மாலை மலர்

சென்னை:

டெல்லி மேல்சபையில் தமிழகத்துக்கான 3 எம்.பி. பதவிகள் காலியாக உள்ளன. அ.தி.மு.க. எம்.பி.க்களாக இருந்த கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் இருவரும் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆனதால் எம்.பி. பதவிகளை ராஜினாமா செய்தனர். அந்த இடங்களும் காலியாக உள்ளன.

இதே போல் முன்னாள் அ.தி.மு.க. ராணிப்பேட்டை முகம்மது ஜான் ராஜ்யசபா எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்ட சிலமாதங்களில் மாரடைப்பால் மரணம் அடைந்ததால் அவரது எம்.பி. பதவியும் காலியாக உள்ளது.

இந்த 3 ராஜ்யசபா எம்.பி. பதவி இடங்களுக்கு அடுத்த மாதம் தேர்தல் நடைபெற உள்ளன. இதற்கான முறையான அறிவிப்பை தேர்தல் கமி‌ஷன் ஓரிரு நாளில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த 3 மேல்சபை எம்.பி. பதவிக்கு தேர்தல் நடைபெறும்போது அதில் தி.மு.க.  சார்பில் நிறுத்தப்படும் நபர்கள் தான் வெற்றி பெறுவார்கள்.

தமிழக சட்டசபையில் தி.மு.க.வுக்கு 125 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்களையும் சேர்த்தால் 159 பேர் உள்ளனர். இவர்களது ஓட்டு விகிதங்களை கணக்கிடும்போது 3 தி.மு.க. வேட்பாளர்களும் எம்.பி.க்களாக வருவது உறுதியாகி விடும்.

பொதுவாக தி.மு.க.வில் ராஜ்யசபா எம்.பி. பதவி என்பது கட்சியில் உள்ள முக்கிய நபர்களுக்குத்தான் கிடைத்து வருகிறது. கட்சிக்காக ஆரம்ப காலம் முதல் பாடுபட்டவர்கள், தேர்தலில் நிற்க வாய்ப்பு கிடைக்காதவர்கள் என்ற அடிப்படையில் கட்சித்தலைவருக்கு நன்கு பரிட்சயமான நபர்தான் இந்த பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்.

அந்த வகையில் தி.மு.க.வில் உள்ள முக்கிய பிரபலங்கள் பலர் தலைவர் மு.க.ஸ்டாலினிடம் தனக்கு எம்.பி. பதவிக்கு வாய்ப்பு தாருங்கள் என்று கோரிக்கை மனு கொடுத்துவைத்துள்ளனர். அந்த வகையில் 300-க்கும் மேற்பட்டவர்கள் மனு கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

ராஜ்யசபா எம்.பி. பதவிக்கு முன்னாள் அமைச்சர்கள் சுப்புலட்சுமி ஜெகதீசன், சுரேஷ்ராஜன், முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன், முன்னாள் எம்.எல்.ஏ. ஆஸ்டின் உள்பட பல பெயர்கள் அடிப்படுகிறது.

ஆனால் தேர்தலில் தோற்றவர்களுக்கு இந்த முறை வாய்ப்பு வழங்காமல் தேர்தலில் சீட் வழங்க முடியாமல் கட்சி பணியாற்றிய நபர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு மு.க.ஸ்டாலின் எம்.பி. பதவி வழங்குவார் என்ற தகவல் தற்போது வெளியாகி வருகிறது. அந்த வகையில் மாவட்ட செயலாளராக இருக்கும் முக்கிய நபர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்.

தேர்தலில் தோற்றவர்களுக்கு தமிழக மேல்சபை உருவாகும்போது அதில் சிலருக்கு வாய்ப்பு வழங்குவார் என்று அறிவாலய வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

டெல்லி மேல்-சபையில் தி.மு.க. எம்.பி.க்கள் 7 பேர் உள்ளனர். இப்போது 3 பேர் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கும் பட்சத்தில் தி.மு.க. எம்.பி.க்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துவிடும். எனவே தி.மு.க.வில் ராஜ்யசபா எம்.பி.க்களாக போகும் அந்த 3 அதிர்ஷ்டசாலி யார் என்ற விவரம் அடுத்த வாரம் தெரிந்து விடும்.