தேவாலயத்தில் பிரார்த்தனை நடத்திய மக்கள் 
செய்திகள்

புத்தாண்டு தினத்தை நம்பிக்கையோடு வரவேற்ற மக்கள்- தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை

தேவாலயத்தில் புத்தாண்டு சிறப்பு வழிபாட்டின்போது உலகம் செழிக்கவும், மக்கள் நலமுடன் வாழவும், கொரோனா தொற்று அழியவும் இறைவனிடம் வேண்டுதல் செய்யப்பட்டது. இதில் அனைவரும் பக்தியுடன் பாடல்கள் பாடி பங்கேற்றனர்.

மாலை மலர்

புத்தாண்டு விழா ஆண்டுதோறும் கிறிஸ்தவ ஆலயங்களில் கோலாகலமாக கொண்டாடப்படும்.

புதிதாக பிறந்த 2021-ம் ஆண்டு வழிபாடுகள் வித்தியாசமாக அமைந்தது. வழக்கமாக புத்தாண்டு விழாவுக்காக கிறிஸ்தவர்கள் சில தினங்களுக்கு முன்பே கொண்டாட்டத்துக்கு தயாராகி விடுவார்கள்.

ஆலயங்களில் புத்தாண்டுக்கு முதல் நாள் நடந்து முடிந்த ஆண்டில் இறைவன் செய்த நன்மைகளுக்காக நன்றி தெரிவிக்கும் வழிபாடு நடைபெறும். இதில் ஏராளமானோர் கலந்து கொள்வார்கள்.

இந்த ஆண்டும் இந்த வழிபாடு நடந்தது என்றாலும், கொரோனா கட்டுப்பாடுகளை கடைபிடித்து குறைந்த எண்ணிக்கையில் கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். பிரபலமான கிறிஸ்தவ ஆலயங்களில் நள்ளிரவு புத்தாண்டு வழிபாடு நடைபெறவில்லை. இரவு 10 மணிக்கு முன்பும், அதிகாலையிலும் புத்தாண்டு வழிபாடுகள் நடந்தன.

சிறப்பு வழிபாட்டின்போது உலகம் செழிக்கவும், மக்கள் நலமுடன் வாழவும், கொரோனா தொற்று அழியவும் இறைவனிடம் வேண்டுதல் செய்யப்பட்டது. இதில் அனைவரும் பக்தியுடன் பாடல்கள் பாடி பங்கேற்றனர். வழிபாடு வழக்கத்தை விட குறைந்த நேரம் நடத்தப்பட்டது. சிறப்பு வழிபாடு முடிந்ததும் ஒருவக்கொருவர் வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர். பெரும்பாலானோர் கை குலுக்காமல், கட்டிப்பிடிக்காமல் வாழ்த்து கூறி மகிழ்ந்தனர். புத்தாண்டு வழிபாட்டில் பங்கேற்போர் வசதிக்காக இன்று மாலை வரை பல்வேறு நேரங்களில் புத்தாண்டு சிறப்பு வழிபாடு நடக்கிறது.

பெசன்ட்நகர் தேவாலயத்தில் இரவு 10 மணிக்கு தேவாலய அதிபர் வின்சென்ட் சின்னத்துரை தலைமையில் சிறப்பு வழிபாடு நடந்தது. பாரிமுனை அந்தோணியார் ஆலயம், எழும்பூர் திரு இருதய ஆண்டவர் ஆலயம், தோமையார்மலை உள்ளிட்ட கத்தோலிக்க ஆலயங்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது.

அதிகமானோர் பங்கேற்கும் ஆலயங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. குறைந்த மக்கள் கூடும் தேவாலயங்களில் நள்ளிரவு பிரார்த்தனை நடந்தது. என்றாலும், அமைதியான முறையில் அனைவரும் வந்து சென்றனர்.

தென் இந்திய திருச்சபை சார்பில் ஜெமினி மேம்பாலம் அருகில் உள்ள கதீட்ரல் ஆலயத்தில் தென் இந்திய திருச்சபை சென்னை பி‌ஷப் ஜார்ஜ் ஸ்டீபன் தலைமையில் புத்தாண்டு சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் உலகம் செழிக்கவும், கொரோனா தொற்று அகலவும் வேண்டுதல் செய்யப்பட்டது. இங்கு நடந்த வழிபாட்டிலுல் கொரோனா கட்டுப்பாடுகளை கடைபிடித்து கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.

இது போல் அண்ணாநகர், அடையாறு, தாம்பரம், பெரம்பூர், மாதவரம், மூலக்கடை, கொடுங்கையூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தென் இந்திய திருச்சபை ஆலயங்களிலும் புத்தாண்டு சிறப்பு வழிபாடு நடந்தது. சிறிய ஆலயங்களில் நள்ளிரவு பிரார்த்தனையும், பெரிய ஆலயங்களில் அதிகாலையும் வழிபாடுகள் நடந்தன.

இ.சி.ஐ. திருச்சபை சார்பில் நடந்த புத்தாண்டு சிறப்பு வழிபாட்டில் பேராயர் எஸ்றா சற்குணம் பங்கேற்றார். இதுபோல் லூத்தரன், பெந்தேகோஸ்து, ஆங்கலிக்கன், மெத்தடிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு கிறிஸ்தவ சபைகள் சார்பிலும் புத்தாண்டு சிறப்பு வழிபாடுகள் நடந்தன.

கிறிஸ்தவர்கள் பங்கேற்ற அனைத்து வழிபாடுகளும் நம்பிக்கையுடன் புத்தாண்டை வரவேற்கும் விதமாக அமைந்து இருந்தது. சென்னை தவிர தமிழ்நாட்டின் பிரபல ஆலயமான நாகை மாவட்டத்தில் உள்ள வேளாங்கண்ணி ஆலயத்தில் அதன் அதிபர் பிரபாகர் தலைமையில் சிறப்பு வழிபாடு நடந்தது. கோவை, மதுரை, தூத்துக்குடி, நெல்லை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் கிறிஸ்தவ ஆலயங்களில் புத்தாண்டு சிறப்பு வழிபாடுகள் உற்சாகத்துடன் நடந்தன. இதில் அனைவரும் மகிழ்ச்சியுடன் பங்கேற்று வழிபட்டனர்.