தாமிரபரணி ஆற்றில் இருகரைகளையும் தொட்டபடி கரைபுரண்டு ஓடும் வெள்ளம் 
செய்திகள்

மழை குறைந்த நிலையிலும் நெல்லை தாமிரபரணி ஆற்றில் 2-வது நாளாக வெள்ளப்பெருக்கு

மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்த மழை காரணமாக குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.

மாலை மலர்

நெல்லை:

தமிழகத்தில் கடந்த 25-ந்தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த பரவலாக மழை பெய்து வருகிறது.

நெல்லை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்த மழை காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. பிரதான அணையான 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்ததால் வேகமாக நிரம்பி வருகிறது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 135.50 அடியாக உள்ளது.

156 அடி கொள்ளளவு கொண்ட சேர்வலாறு அணையில் 136.51 அடியும், 118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணையில் 80.90 அடியும் நீர் இருப்பு உள்ளது. சேர்வலாறில் இன்று காலைவரை 14 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. கொடுமுடியாறு அணை பகுதியில் பெய்த மழை காரணமாக முழு கொள்ளளவான 52.50 அடியை அணையானது விரைவில் எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 50.50 அடியாக உள்ளது. அணை நிரம்ப இன்னும் 2 அடியே தேவை.

மாவட்டம் முழுவதும் நேற்று முதலே மழை குறையத்தொடங்கியது. இன்றும் காலையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும், ஆங்காங்கே மட்டுமே லேசான சாரல் பெய்தது. மாவட்டத்தில் அம்பை, சேரன்மகாதேவி, மணிமுத்தாறு, நாங்குநேரி, பாபநாசம் உள்ளிட்ட பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்தது.

ராதாபுரம் பகுதியில் அதிகபட்சமாக 17 மில்லிமீட்டர் மழை பதிவாகியது. களக்காடு நம்பியாறு பகுதியில் 22 மில்லிமீட்டரும், கொடுமுடியாறில் 12 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது. மழை வெகுவாக குறைந்தாலும் தாமிரபரணி ஆற்றில் 2-வது நாளாக தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

கடந்த சில நாட்களாக பெய்த மழையால் தாமிரபரணி ஆற்றில் இரு கரைகளையும் தொட்டபடி வெள்ளம் சென்றது. இன்றும் வெள்ளம் பாய்ந்தோடுகிறது. டவுன் குறுக்குத்துறை முருகன்கோவிலை சூழ்ந்துள்ள வெள்ளம் இன்னும் குறையவில்லை. இதனால் சிறுவர்கள் ஆற்று பகுதிக்கு செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

தென்காசி மாவட்டத்தில் அணை பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த பலத்த மழையால் அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. 85 அடி கொள்ளளவு கொண்ட கடனா அணையில் நீர்வரத்து அதிகரித்ததால் நேற்று நிரம்பியது. இதனால் அணைக்கு வரும் 208 கனஅடி நீரும் அப்படியே வெளியேற்றப்படுகிறது. அணையில் நீர் இருப்பு 83 அடியாக உள்ளது.

இதேபோல்72 அடி கொண்ட கருப்பாநதியின் நீர்மட்டம் 69.56 அடியாகவும், 84 அடி கொண்ட ராமநதியில் 75.50 அடியாகவும் உள்ளது. 132 அடி கொள்ளளவு கொண்ட அடவிநயினாரில் 129 அடி நீர் இருப்பு உள்ளது. மிகச்சிறிய அணையான குண்டாறு தொடர்ந்து 5 மாதங்களுக்கும் மேலாக நிரம்பி வழிகிறது.

மாவட்டத்தில் ஆலங்குளம், பாவூர்சத்திரம், தென்காசி, செங்கோட்டை, கடையம், சங்கரன்கோவில், கடையநல்லூர், சிவகிரி, வாசுதேவநல்லூர் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இன்று அதிகாலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது.

மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்த மழை காரணமாக குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. மெயினருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி, புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரிக்கிறது.