மணிமுத்தாறு அணை 
செய்திகள்

நெல்லை, தென்காசியில் மழை நீடிப்பு- 2 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பிய மணிமுத்தாறு அணை

நெல்லை, தென்காசியில் தொடர் மழை காரணமாக கடந்த 2 ஆண்டுகளில் இப்போது தான் மணிமுத்தாறு அணை நிரம்பி உள்ளது.

மாலை மலர்

நெல்லை:

தமிழகத்தில் வழக்கமாக டிசம்பர் மாதத்துடன் வடகிழக்கு பருவமழை முடிந்துவிடும். ஆனால் இந்த ஆண்டு பருவமழை வருகிற 12-ந் தேதி வரை நீடிக்கும் என்று அறிவித்துள்ளார்கள்.

கடும் குளிர் வாட்டும் இந்த காலத்தில் தற்போது மழை பெய்து வருகிறது. நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டத்திலும் பரவலாக இன்று காலைவரை மழை பெய்துள்ளது.

நெல்லை மாவட்டத்தில் அதிகபட்சமாக பாபநாசத்தில் 23 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் அதிகபட்சமாக விளாத்திகுளத்தில் 45 மில்லிமீட்டர் மழையும், தென்காசி மாவட்டத்தில் அதிகபட்சமாக கடனாநதி அணைப்பகுதியில் 25 மில்லிமீட்டர் மழையும் பெய்துள்ளது.

இதுதவிர நெல்லை, தென்காசி மாவட்டங்களில் அனைத்து பகுதியிலும் மிதமான மற்றும் சாரல் மழை பெய்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி, மணியாச்சி, கயத்தாறு, கடம்பூர், கழுகுமலை, கோவில்பட்டி பகுதிகளை தவிர்த்து மற்ற பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளது.

தொடர் மழை காரணமாக அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. மணிமுத்தாறு அணைக்கு இன்று காலை வினாடிக்கு 640 கனஅடி தண்ணீர் வருகிறது. கடந்த 2 ஆண்டுகளாக மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 115 அடியை தாண்டவில்லை. உச்சநீர்மட்டம் 118 அடியில், இந்த ஆண்டு தான் இன்று அதிகபட்சமாக 117.40 அடியாக உள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் இப்போது தான் மணிமுத்தாறு அணை நிரம்பி உள்ளது.

இதைத்தொடர்ந்து இன்று காலை மணிமுத்தாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் தாமிரபரணி ஆற்றுக்கு திறந்து விடப்பட்டது. இதனால் தாமிபரணி ஆற்றில் தண்ணீர் வெள்ளமாக செல்கிறது.

வழக்கமாக மணிமுத்தாறு அணையில் இருந்து 1-வது, 2-வது ரீச்சில் இருந்து ஒரு ஆண்டும், 3-வது, 4-வது ரீச்சில் இருந்த மறு ஆண்டும் தண்ணீர் திறப்பார்கள். அதன்படி மணிமுத்தாறு 3, 4-வது ரீச்சில் இந்த ஆண்டு தண்ணீர் திறந்து விடப்பட்டது.

தற்போது அணை நிரம்பியதால், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று 1-வது, 2-வது ரீச்களிலும் தண்ணீர் திறந்து விட உத்தரவிட்டுள்ளார். இதனால் வருகிற 12-ந் தேதி முதல் மார்ச் 31-ந் தேதி வரை பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

இதன்மூலம் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் 11 ஆயிரத்து 134 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

ஏற்கனவே பாபநாசம் அணை நிரம்பி அனைத்து பாசன கால்வாய்களிலும் தண்ணீர் திறந்து விடப்பட்டு விவசாயப் பணிகள் நடந்து வருகிறது. இதுபோல கடனாநதி, ராமநதி, கருப்பாநதி, குண்டாறு, அடவிநயினார் அணைகளும் இந்த ஆண்டு 2 முறை நிரம்பும் பாசன வசதி நடைபெற்று வருகிறது.

தென்மேற்கு பருவமழை, வடகிழக்கு பருவமழை ஆகிய 2 பருவ காலங்களிலும், இதுவரை நம்பியாறு அணை மட்டும் நிரம்பவில்லை. அந்த அணையில் தற்போது 10.62 அடி நீர்மட்டம் உள்ளது. கொடுமுடியாறு அணை வடகிழக்கு பருவமழையில் இன்னும் நிரம்பவில்லை. தற்போது அங்கு 27 அடி நீர்மட்டம் உள்ளது.

தற்போது குளிர்காலமான ஜனவரி மாதமும் மழை நீடித்து வருவதால், நெற்பயிர்கள் மற்றும் வாழை பயிர்கள் பல இடங்களில் தண்ணீரில் முழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மேலும் நெற்பயிர்கள் பூத்து, பால் அடைக்கும் பருவத்தில் அதிகமழை பெய்தால் நெற்பதர்கள் அதிகமாகும் நிலையும் ஏற்படும்.

சில இடங்களில் பூச்சி தாக்குதல் அதிகம் ஏற்படும். இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இதுதொடர்பாக வேளாண்மை அதிகாரிகள் ஆலோசனை வழங்கி வருகிறார்கள்.