நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் (கோப்புப்படம்) 
செய்திகள்

நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் அபிஷேக நேரம் மாற்றம்

நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி, அமாவாசை, பவுர்ணமி, தமிழ் மாத முதல் ஞாயிற்றுக்கிழமை மற்றும் இதர விசே‌ஷ தினங்களில் வழக்கத்தை காட்டிலும் அதிக அளவில் பக்தர்கள் கூட்டம் இருக்கும்.

நாமக்கல்:

நாமக்கல் நகரின் மத்தியில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோயில் உள்ளது. 18 அடி உயரத்தில் கம்பீரமாக காட்சியளிக்கும் சாமியை தரிசிக்க பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் தினசரி வந்து செல்கின்றனர். இக்கோவிலில் அனுமன் ஜெயந்தி, அமாவாசை, பவுர்ணமி, தமிழ் மாத முதல் ஞாயிற்றுக்கிழமை மற்றும் இதர விசே‌ஷ தினங்களில் வழக்கத்தை காட்டிலும் அதிக அளவில் பக்தர்கள் கூட்டம் இருக்கும்.

கொரோனா தொற்றின் 2-ம் கட்ட அலை வேகமெடுக்கத் தொடங்கி உள்ளதால், மத்திய, மாநில அரசுகள் கொரோனா நெறிமுறைகளை வகுத்துள்ளன. கோவில்களிலும் பக்தர்களுக்கு பலவித கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. நாமக்கல் ஆஞ்சநேயருக்கு தமிழ் மாத முதல் ஞாயிற்றுக்கிழமையையொட்டி வழக்கமாக காலை 10 மணி முதல் 12.30 மணி வரையில் நல்லெண்ணை, சீயக்காய், பால், தயிர், மஞ்சள், சந்தனம் உள்ளிட்டவற்றால் சாமிக்கு அபிஷேகம் நடத்தப்பட்டு பின்னர் சிறப்பு அலங்காரம் நடைபெறும். தற்போதைய சூழலில், அந்த நேரத்தில் அபிஷேகம் நடத்தப்பட்டால் பக்தர்கள் கூட்டம் காரணமாக நோய்த்தொற்று அதிகரிக்கக் கூடும்.

இதனைத் தவிர்க்க, அதிகாலை 5 மணிக்கு சிறப்பு அபிஷேகத்தை நடத்தி முடிக்க கோயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. பக்தர்கள் வருகை குறைவாக இருக்கும், அர்ச்சகர்களும் விரைந்து அபிஷேகத்தை நடத்தி முடிப்பார்கள். கொரோனா பரவலுக்கு வாய்ப்பு இருக்காது என்ற அடிப்படையில் சித்திரை மாத முதல் ஞாயிற்றுக்கிழமை அபிஷேகம் அதிகாலையில் நடைபெற்றது. கொரோனா கட்டுக்குள் வராதபட்சத்தில், அடுத்த தமிழ் மாதத்திலும் இதே நிலை தொடரலாம் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.