நாகூர்:
நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ் மீனா உத்தரவின் பேரிலும், துணை போலீஸ் சூப்பிரண்டு முருகவேல் அறிவித்தல் படியும், சாராய கடத்தலை தடுக்க பல்வேறு இடங்களில் போலீசார் வாகன சோதனை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் நாகூர் முட்டம் பஸ் நிலையம் அருகில் நாகூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர். அப்போது திட்டச்சேரியில் இருந்து மோட்டார் சைக்கிளில் சாக்குமூட்டையுடன் வந்தவரை நிறுத்தி சோதனை செய்தனர். மூட்டையில் சாராயம் இருந்தது. பின்னர் மோட்டார் சைக்கிளில் வந்தவரிடம் விசாரணை நடத்தினர். இதில் அவர், நாகை அக்கரைகுளம் வடக்கு தெருவை சேர்ந்த தனம்கொடி மகன் பிரதாப் (வயது39) என்பதும், மோட்டார் சைக்கிளில் சாராயம் கடத்தி வந்ததும் தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரதாப்பை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 110 லிட்டர் சாராயம் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.