சங்கராபுரம்:
சங்கராபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் விசு(வயது 32). நகை தொழிலாளியான இவர் கடந்த 23-ந் தேதி கள்ளக்குறிச்சிக்கு சென்று வருவதாக கூறி சென்றவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் விசுவை காணவில்லை.
இந்த நிலையில் நேற்று காலை 7 மணி அளவில் சங்கராபுரம் பூட்டை சாலையில் தனியார் மண்டபம் அருகில் உள்ள ஒரு கட்டிடத்தின் வாயிற்படியில் விசு மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுபற்றிய தகவல் அறிந்து வந்த சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார் விசுவின் உடலை பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவுசெய்து விசுவின் சாவுக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இறந்துபோன விசுவுக்கு மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.