வல்லம்:
தஞ்சையை அருகே உள்ள குருவாடிப்பட்டியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன்(வயது 56). இவர் தஞ்சை மருத்துவக்கல்லூரி விடுதியில் கிளார்க்காக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் இரவு பாலசுப்பிரமணியன் திருமலைசமுத்திரத்தில் அவருடைய உறவினரின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு மோட்டார் சைக்கிளில் திரும்பி தஞ்சை சாலையில் வந்து கொண்டிருந்தார். அப்போது பின்புறம் வந்த அரசு பஸ் திடீரென பாலசுப்ரமணியன் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் சாலையில் தூக்கி வீசப்பட்ட அவர் படுகாயம் அடைந்தார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே பாலசுப்பிரமணியன் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வல்லம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.