கோழிக்கோடு:
ஆலப்புழா அருகே உள்ள செரியநாடு பகுதியை சேர்ந்தவர் ஹரிதாஸ். இவருடைய மனைவி சுஜிதா. இவர்களுக்கு சண்முகம் (வயது 22), அப்பு (18) ஆகிய மகன்கள் இருந்தனர். சுஜிதாவின் பெற்றோர் அருகே உள்ள செரியமங்கலத்தில் வசித்து வருகிறார்கள். அவர்களுக்கு தினமும் சண்முகமும், அப்புவும் உணவு கொடுத்துவிட்டு வருவது வழக்கம்.
அதன்படி நேற்று முன்தினம் மாலையில் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் சென்றனர். சண்முகம் மோட்டார் சைக்கிளை ஓட்ட அப்பு பின்னால் அமர்ந்து இருந்தார்.
2 பேரும் செரியமங்கலம் அருகே சென்றபோது திடீரென்று மோட்டார் சைக்கிள் சண்முகத்தின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. பின்னர் சாலையின் ஓரத்தில் இருந்த மரத்தில் மோதியது. இந்த விபத்தில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டதில் படுகாயம் அடைந்தனர்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆலப்புழா ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருந்தபோதிலும் அவர்கள் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தனர்.