விபத்து 
செய்திகள்

கரூர் அருகே விபத்து- மாற்றுத்திறனாளி உள்பட 3 பேர் பலி

கரூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் மாற்றுத்திறனாளி உள்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரவக்குறிச்சி:

தேனி மாவட்டம் அன்னை இந்திரா நகர் பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணி மகன் விசுவநாதன் (வயது 25). அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் மகன் வினோத் (20). இவர்கள் இருவரும் ஈரோட்டில் வெல்டராக வேலை பார்த்து வந்தனர்.

நேற்று முன்தினம் இரவு இருவரும் மோட்டர் சைக்கிளில் ஈரோட்டில் இருந்து தேனி சென்று கொண்டிருந்தனர்.

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி இந்திரா நகர் பிரிவு அருகே சென்று கொண்டிருந்தபோது அரவக்குறிச்சி தெத்துப்பட்டியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி செல்லமுத்து (50), அவரது மனைவி லதாவுடன் (35), மாற்றுத்திறனாளிக்கான 3 சக்கர மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.

இந்தநிலையில் 2 வாகனங்களும் நேருக்குநேர் மோதின. இதில் வினோத் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து வந்த விஸ்வநாதன் தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காயம் அடைந்த வினோத், செல்லமுத்து, லதா ஆகியோரை பொதுமக்கள் மீட்டு அரவக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக கரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியில் செல்லமுத்து உயிரிழந்தார். அவரது மனைவி லதா அமராவதி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். படுகாயமடைந்த வினோத் கோவையில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த விபத்து குறித்து அரவக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.