பணகுடி:
குமரி மாவட்டத்தை சேர்ந்தவர் அருள் ஜாக்சன். இவர் நெல்லை மாவட்டம் பணகுடி போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரிந்து வருகிறார்.
இவருக்கும், இவரது மனைவிக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2 பேரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். கடந்த ஜனவரி மாதம் முதல் பணகுடி போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வருகிறார்.
இவர் கொடைக்கானல் குண்டுபட்டி கிராமத்தை சேர்ந்த ஒரு பெண்ணை குழந்தையுடன் கூட்டிக்கொண்டு வந்து பணகுடியில் குடும்பம் நடத்தி வந்துள்ளார்.
அந்த பெண்ணின் 13 வயது சிறுமியை கடந்த 2 மாதங்களாக அருள் ஜாக்சன் பாலியல் தொந்தரவு செய்து வந்ததாகவும், இந்த சம்பவங்கள் அனைத்தும் சிறுமியின் தாய்க்கும் தெரியும் என்றும் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சர்ச்சில் என்பவருக்கு புகார் வந்துள்ளது. உடனே அவர் விசாரணை நடத்தியதில் மேற்கண்ட சம்பவங்கள் உண்மை என தெரியவந்துள்ளது.
இதையடுத்து அவர் வள்ளியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ்காரர் அருள் ஜாக்சன் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த அவரது கள்ளக்காதலி ஆகியோர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த அருள் ஜாக்சன் மற்றும் அவரது கள்ளக்காதலி ஆகிய 2 பேரும் தலைமறைவாகினர். அருள் ஜாக்சன் கடந்த 26-ந்தேதி முதல் விடுப்பில் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.