தமிழகத்தில் இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான புதிய அரசு பதவியேற்க உள்ளது. மு.க.ஸ்டாலினுடன் 33 அமைச்சர்கள் பதவியேற்கிறார்கள்.
இன்று முதல்-அமைச்சராகும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்க்கை குறிப்பு வருமாறு:-
மாணவ பருவத்தில் அரசியல்
முதல்-அமைச்சராக பொறுப்பு ஏற்க உள்ள மு.க.ஸ்டாலின், மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதிக்கும், தயாளு அம்மாளுக்கும் 1953-ம் ஆண்டு மார்ச் 1-ந்தேதி 3-வது மகனாக பிறந்தார். ரஷிய அதிபர் ஸ்டாலின் நினைவாக இவருக்கு இந்த பெயரை சூட்டினார் கருணாநிதி. மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா. இந்த தம்பதியர்களுக்கு உதயநிதி என்ற மகனும், செந்தாமரை என்ற மகளும் இருக்கிறார்கள். மு.க.ஸ்டாலின் மாநில கல்லூரியில் கல்லூரிப் படிப்பை முடித்தார். தந்தையின் தாக்கத்தால், இளம் வயதிலேயே மு.க.ஸ்டாலினுக்கு நாடகக்கலை மற்றும் அரசியலில் ஆர்வம் இருந்தது. இவர் நடித்த முதல் நாடகமான ‘முரசே முழங்கு' வெற்றிவிழா கண்டது. அதைத்தொடர்ந்து ‘திண்டுக்கல் தீர்ப்பு', ‘நீதி தேவன் மயங்குகிறான்', ‘நாளை நமதே' என திராவிட கொள்கைகளை விளக்கும் பல நாடகங்களிலும் நடித்துள்ளார்.
1973-ம் ஆண்டு தி.மு.க. பொதுக்குழு உறுப்பினராக மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1976-ம் ஆண்டு `மிசா’ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஒரு ஆண்டு சிறையில் அடைக்கப்பட்டார். 1983-ம் ஆண்டுதி.மு.க.வின் மாநில இளைஞரணி செயலாளராகப் பொறுப்பேற்றார். 1996-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றிபெற்று, ‘முதன்முறையாக மக்களால் நேரடியாக வாக்களித்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மேயர்' என்ற பெருமையையும் மு.க.ஸ்டாலின் பெற்றார். 2001-ம் ஆண்டு மீண்டும் சென்னை மேயராக போட்டியிட்டு 2-வது முறையாக வெற்றிபெற்றார்.
ஆனால் 2002-ல் ஆட்சியிலிருந்த அ.தி.மு.க. அரசு கொண்டு வந்த சட்டத்திருத்தமான, `ஓரே நபர் இரண்டு அரசு பதவிகளில் இருக்க முடியாது’ என்ற காரணத்தால், அதே ஆண்டு, தான் வெற்றிபெற்ற சட்டமன்ற உறுப்பினர் பதவியை வைத்துக்கொண்டு மேயர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின். 1996, 2001 மற்றும் 2006-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு தொடர்ச்சியாக மூன்று முறை வெற்றிபெற்றார். 2006-ல் தி.மு.க. ஆட்சிக்கு வந்தபோது உள்ளாட்சித்துறை அமைச்சராகப் பதவியேற்றார். 2008-ம் ஆண்டு தி.மு.க.வின் பொருளாளராகப் பொறுப்பேற்றார். அதைத் தொடர்ந்து, 2009-ம் ஆண்டு தமிழகத்தின் முதல் துணை முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் நியமிக்கப்பட்டார்.