சென்னை:
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில் கூறியிருப்பதாவது:-
இன்று காலை, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இனமானப் பேராசிரியர் க.அன்பழகன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாளையொட்டி, அவரது இல்லத்திற்குச் சென்று, அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினார்.
பின்னர், அவர் தமது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள, செய்தியின் விவரம் பின்வருமாறு:-
திராவிடக் கருத்தியல் பாதையில் நம்மை வழிநடத்தும் இனமானப் பேராசிரியர் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவேந்தல்.
இளம்பருவத்தில் தன் நெஞ்சில் ஏந்திய திராவிடக் கொள்கையை முதுமையிலும் வைரம் பாய்ந்த மரம் போல உறுதியாகப் பற்றி நின்று, கருணாநிதி தலைமையிலான தி.மு.க.வை காப்பது ஒன்றே தன் கடமை எனக் கருதி, கழகத்தில் தன்னைவிட இளையோர் அனைவருக்கும் திராவிட வகுப்பெடுத்துக் கொள்கை உணர்வினை ஊட்டியவர் நம் இனமானப் பேராசிரியர்.
குடும்பப் பாசம் மிகுந்த இயக்கமான தி.மு.கழகத்தில் தலைவர் கலைஞரிடம் எந்தளவுக்கு இயக்கப் பயிற்சி பெற்றேனோ அதே அளவுக்கு, ‘பெரியப்பா’ பேராசிரியரிடமும் பயிற்சியினைப் பெற்றேன்.
அந்தப் பயிற்சிதான் இன்று தி.மு.க. எனும் பேரியக்கத்தின் தலைவர் எனும் பெரும் பொறுப்பைச் சுமந்து பயணிப்பதற்கு உரமாகவும் ஊக்கமாகவும் இருக்கிறது.
தந்தை பெரியாரின் பகுத்தறிவுப் பள்ளி மாணவராக பேரறிஞர் அண்ணாவின் இதயம் நிறைந்த அன்புத் தம்பியாக தலைவர் கலைஞருக்குத் தோள் கொடுத்து நின்ற கொள்கைத் தோழராக இயக்கக் கருத்தியலின் தலைவராகத் தன் வாழ்நாள் முழுவதும் திராவிடம் பரப்பிய பாடுபட்ட இனமானப் பேராசிரியர் அன்பழகம் முதலாம் ஆண்டு நினைவு நாளில், அவர் கற்றுத் தந்த தத்துவப் பாடங்களை நெஞ்சில் ஏந்தி, மதவாத பிற்போக்கு அடிமை சக்திகளை முறியடித்து, மத நல்லிணக்க சுயமரியாதைமிக்க சமூகநீதி இயக்கங்களின் மகத்தான வெற்றிக்கு அயராது பாடுபட உறுதியேற்போம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.