குமரி மாவட்டம் வள்ளவிளையைச் சேர்ந்தவர் ஜோசப் பிராங்ளின். இவருக்கு சொந்தமான விசைப்படகில் அதே பகுதியைச் சேர்ந்த பிரெடி, ஏசுதாசன், ஜாண், சுரேஷ், ஜெபிஷ், விஜிஸ், ஜெனிஸ்டன், ஜெகன், ஷெட்ரிக், மால்வின் ஆகிய 11 பேரும் கடந்த 9-ந்தேதி தேங்காப்பட்டணம் துறைமுகத்தில் இருந்து மீன் பிடிக்கச் சென்றனர்.
கடந்த 23-ந்தேதி வரை மீனவர்கள் தங்களது குடும்பத்தினருடன் தொடர்பில் இருந்தனர். அதன் பிறகு அவர்கள் தொடர்பு கொள்ளவில்லை. இந்த நிலையில் மீனவர்கள் சென்ற விசைப்படகு ஒன்று கோவா அருகே நடுக்கடலில் உடைந்து கிடப்பதை சக மீனவர்கள் பார்த்தனர்.
இது குறித்து மீனவ குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். மீனவர் குடும்பத்தினரும், மீனவ பிரதிநிதிகளும் மாயமான மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தினார்கள். இதையடுத்து விமானம், ஹெலிகாப்டர் மூலம் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.
இந்த நிலையில் விசைப்படகின் உரிமையாளர் ஜோசப் பிராங்ளின் இன்று காலை தனது குடும்பத்தினரை தொடர்பு கொண்டு பேசினார். அவரது பேச்சை கேட்டதும் அவரது குடும்பத்தினர் சந்தோஷம் அடைந்தனர்.
ஜோசப் பிராங்ளின் தற்போது தாங்கள் அனைவரும் பத்திரமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். இந்த தகவல் சக மீனவர்கள் குடும்பத்தினருக்கும் தெரிவிக்கப்பட்டது. இதைக் கேட்டு அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர்.
இது குறித்து ஜோசப் பிராங்ளின் கூறியதாவது:-
கடந்த 23-ந்தேதி கோவா கடல் பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த கப்பல் ஒன்று விசைப்படகின் மீது மோதியதாகவும், அதில் விசைப்படகின் ஒரு பகுதி சேதமடைந்தது. கப்பல் எங்கள் படகின் மீது மோதிய நேரத்தில் நாங்கள் உயிர் பிழைப்போம் என்று நினைக்கவில்லை. அதிர்ஷ்டவசமாக தப்பினோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
மீனவர்கள் லட்சத்தீவு பகுதியில் வந்து கொண்டிருக்கும் தகவல் கடலோர காவல் படை போலீசுக்கு தெரிவிக்கப்பட்டது. போலீசார்அங்கு சென்று மீனவர்களை மீட்டனர். மீட்கப்பட்ட மீனவர்களை பத்திரமாக அழைத்து வருகிறார்கள்.