அமைச்சர் பாண்டியராஜன் 
செய்திகள்

பா.ஜனதா கட்சியின் நடவடிக்கைகளுக்கு ஆதரவோ, எதிர்ப்போ கிடையாது- அமைச்சர் பாண்டியராஜன்

பா.ஜனதா கட்சியின் நடவடிக்கைகளுக்கு ஆதரவோ, எதிர்ப்போ கிடையாது என்று தமிழ் வளர்ச்சி மற்றும் கலை பண்பாட்டு துறை அமைச்சர் பாண்டியராஜன் கூறினார்.

மாலை மலர்

பெரம்பூர்:

சென்னை பெரம்பூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் நேற்று கலந்து கொள்ள வந்த தமிழ் வளர்ச்சி மற்றும் கலை பண்பாட்டு துறை அமைச்சர் க.பாண்டியராஜன் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதன் பின்னர் அவர் நிருபர்களிடம் பேசும்போது, ‘அரசாங்கத்திற்கு ஒத்துழைக்க வேண்டியது பா.ஜ.க.வின் கடமை. அவர்கள் தற்போது செய்து வரும் செயல் மக்களிடம் நல்ல முறையில் போய் சேருகிறதா? என்பதை அவர்கள் பார்க்க வேண்டும். அவர்களின் அரசியல் ரீதியான நடவடிக்கைகளுக்கு நாங்கள் ஆதரவும் கிடையாது. எதிர்ப்பும் கிடையாது.

கொரோனா காலத்தில் தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதைத்தான் எடுத்து வருகிறது. பா.ஜ.க. தற்போது மேற்கொண்டு வரும் செயல்கள் மக்கள் நலனுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய செயல்கள் என்ற எண்ணம் மக்களுக்கு வந்துவிடக்கூடாது. 100 பேருக்கு மேல் ஒன்று கூடினால் கைது செய்ய வேண்டும் என்பது தற்போது கொரோனா காலத்தில் உள்ள ஊரடங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை. அதைத்தான் வேல் யாத்திரை விவகாரத்தில் தற்போது நாங்கள் செய்து வருகிறோம்.

பள்ளிகள் திறப்பது குறித்து பெற்றோரிடம் கருத்து கேட்கப்பட்டுள்ளது. அதற்கு ஏற்ற வகையில் நல்ல முடிவு எடுக்கப்படும்’ என தெரிவித்தார்.