அமைச்சர் ஜெயக்குமார் 
செய்திகள்

சசிகலா, அ.தி.மு.க. கொடியை பயன்படுத்தினால் காவல்துறை தன் கடமையை செய்யும் - அமைச்சர் ஜெயக்குமார்

சசிகலா அ.தி.மு.க. கட்சி கொடியை பயன்படுத்தினால் காவல்துறை தன் கடமையை செய்யும் என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

மாலை மலர்

சென்னை:

சொத்துகுவிப்பு வழக்கில் சசிகலாவின் ஜெயில் தண்டனை காலம் முடிவடைந்ததையடுத்து பெங்களூர் சிறையில் இருந்து விடுதலை ஆனார்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று குணமடைந்த பின்னர் புறப்பட்ட போது காரின் முன் பகுதியில் அ.தி.மு.க. கொடி இடம் பெற்று இருந்தது.

இதற்கு அ.தி.மு.க. தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அமைச்சர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுதொடர்பாக போலீசிலும் புகார் செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே சசிகலா நாளை பெங்களூரில் இருந்து சென்னைக்கு வருகிறார்.

சசிகலா அ.தி.மு.க. கட்சி கொடியை பயன்படுத்தினால் காவல்துறை தன் கடமையை செய்யும். சசிகலாவுக்கும் கட்சிக்கும் சம்மந்தம் இல்லை என்று அனைவருக்கும் தெரியும். அந்த குடும்பத்தின் தலையீடு இல்லாமல் அ.தி.மு.க. ஆட்சி மலர வேண்டும் என்பதுதான் நோக்கம்.

தி.மு.க.வின் ‘பி’ டீமாக சசிகலாவும், தினகரனும் செயல்படுகின்றனர். முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதுபோல அவர்கள் நிராகரிக்கப்பட்டவர்கள். இனி அவர்கள் கட்சிக்கு வர வாய்ப்பே இல்லை.

சசிகலா வருகையால் அச்சமா என்று கேள்வி கேட்கிறீர்கள். எங்களுக்கு பயம் என்றால் என்ன வென்றே தெரியாது. அச்சம் என்பது மடமையடா, அஞ்சாமை திராவிடர் உடைமையடா என்று வளர்க்கப்பட்டவர்கள் நாங்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.