பேராவூரணி:
தமிழகத்தில் கொரோனா வைரசின் 2ம் அலை கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இரண்டாம் அலையில் கிராமப் புறங்களிலும் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளதால் மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்தது. இதனால் பல்வேறு பகுதிகளில் கொரோனா சிறப்பு சிகிச்சை மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
அவ்வகையில், தஞ்சை மாவட்டம் பேராவூரணி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட முடச்சிக்காடு அரசு கலை அறிவியல் கல்லூரியில் 100 படுக்கை வசதிகளுடன் கூடிய சிறப்பு சிகிச்சை மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. கொரோனாவில் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தி வைப்பதற்காக, பேராவூரணி திமுக எம்எல்ஏ அசோக்குமார் தனது சொந்த செலவில் இந்த படுக்கை வசதிகளை ஏற்படுத்தி கொடுத்துள்ளார்.
இந்த மையத்தை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார். பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பழநிமாணிக்கம், சட்டமன்ற உறுப்பினர் அசோக்குமார் மற்றும் சட்டமன்ற கொறடா கோவி செழியன், பட்டுக்கோட்டை எம்எல்ஏ கா.அண்ணாத்துரை ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். செருவாவிடுதி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தையும் அவர்கள் ஆய்வு செய்தனர்.
கொரோனா காலத்தில் மக்களின் துயர் துடைக்கும் வகையில், மருத்துவ வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்த எம்எல்ஏ அசோக்குமாரை பேராவூரணி சட்டமன்ற தொகுதி பொதுமக்கள் பாராட்டி, நன்றி தெரிவித்துள்ளனர். மேலும் இந்த மையத்தை திறந்து வைத்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் மக்கள் பிரதிநிதிகளுக்கும் நன்றி தெரிவித்துள்ளனர்.