போராட்டம் 
செய்திகள்

சுற்றுலா தலங்களுக்கு தடை: கொடைக்கானலில் வியாபாரிகள் கடையடைப்பு-போராட்டம்

சுற்றுலா தலங்களுக்கு தமிழக அரசு விதித்துள்ள தடையை மறு பரிசீலனை செய்யக்கோரி கொடைக்கானலில் இன்று வியாபாரிகள் கடையடைப்பு மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாலை மலர்

கொடைக்கானல்:

தமிழகத்தில் கொரோனா 2-ம் அலை வேகமாக பரவிவரும் நிலையில் இதனை தடுக்க தமிழக அரசு பல்வேறு அறிவிப்புகளை நேற்று வெளியிட்டது. அதன்படி நாளை முதல் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அறிவித்தது.

அதே போல கொடைக்கானல் உள்ளிட்ட அனைத்து சுற்றுலா தலங்களுக்கும் மறு உத்தரவு வரும் வரை சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த கொடைக்கானல் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் இன்று போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தனர்.

அதன்படி நகரில் உள்ள அனைத்து கடைகளையும் அடைத்து மூஞ்சிக்கல், பஸ்நிலையம் அருகே தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து அவர்கள் தெரிவிக்கையில், கடந்த வருடம் கொரோனா ஊரடங்கு காரணமாக கொடைக்கானலைச் சேர்ந்த வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இங்குள்ள மக்கள் அனைவரும் சுற்றுலாவை நம்பியே வாழ்ந்து வருகின்றனர்.

தற்போது தமிழக அரசு சுற்றுலா தங்களுக்கு தடை விதித்துள்ளதால் இங்குள்ள ஓட்டல், விடுதி உரிமையாளர்கள் உள்பட டாக்சி ஓட்டுனர்கள், வியாபாரிகள் என அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.

வழக்கமாக ஏப்ரல் மே மாதங்களில் கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருக்கும். ஆனால் தற்போது கொரோனா கட்டுப்பாடுகளால் குறைந்த அளவு சுற்றுலா பயணிகளே வருகின்றனர்.

தமிழக அரசு சுற்றுலா தலங்களை மூட உத்தரவிட்டால் அவர்களின் வருகையும் முற்றிலும் குறைந்து விடும். இதனால் கொடைக்கானலில் சுற்றுலா தொழிலை நம்பியுள்ளவர்கள் முற்றிலும் பாதிக்கப்படுவார்கள். எனவே தளர்வுகளுடன் சுற்றுலா பயணிகளை கொடைக்கானலுக்கு அனுமதிக்க வேண்டும்.

மேலும் சுற்றுலா தொழிலை நம்பியுள்ள தொழிலாளர்களுக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும் என்று தெரிவித்தனர். தங்கள் கோரிக்கைளை நிறைவேற்றும் வரை போராட்டம் நடத்தப்போவதாகவும் தெரிவித்தனர். இதனால் கொடைக்கானலில் பரபரப்பு ஏற்பட்டது.