தற்கொலை 
செய்திகள்

கோவையில் வியாபாரி ரெயில் முன் பாய்ந்து தற்கொலை

மனைவியை அரிவாளால் வெட்டிய வியாபாரி போலீசுக்கு பயந்து ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

மாலை மலர்

துடியலூர்:

கோவை என்.ஜி.ஜி.ஓ. காலனி வட்டமலைபாளையத்தை சேர்ந்தவர் ரவி (வயது 50). துணி வியாபாரி. இவருக்கு கல்பனா (42) என்ற மனைவியும், அஜித் (25), கோகுல் (20) ஆகிய மகன்களும் உள்ளனர். இந்தநிலையில் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து கல்பனா தனது கணவரை பிரிந்து சென்று அதே பகுதியில் தனியாக வீடு எடுத்து தங்கி இருந்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் கடந்த 6-ந் தேதி கல்பனா பால் வாங்குவதற்காக வட்டமலைபாளையத்தில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்றார். அப்போது அங்கு வந்த ரவி தனது மனைவியை தன்னுடன் சேர்ந்து வாழ வருமாறு அழைத்து உள்ளார்.

அப்போது அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டு உள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த ரவி தான் மறைத்து வைத்து இருந்த அரிவாளை எடுத்து மனைவியின் கழுத்து உள்பட பல்வேறு பகுதிகளில் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கு இருந்து தப்பினார். இதில் பலத்த காயம் அடைந்த கல்பனாவை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அங்கு உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் துடியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரவியை தேடி வந்தனர்.

இதற்கிடையே மனைவியை அரிவாளால் வெட்டியதால் அவர் இறந்துவிடுவார் என்று கருதி போலீசார் தன்னை விசாரணைக்கு அழைத்து கைது செய்வார்கள் என்று பயந்த ரவி நேற்று முன்தினம் இரவு மேட்டுப்பாளையம் பகுதிக்கு சென்றார். பின்னர் அவர் தற்கொலை செய்வதற்காக அங்கு வந்த நீலகிரி எக்ஸ்பிரஸ் ரெயில் முன் பாய்ந்தார். இதில் அவர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் மேட்டுப்பாளையம் ரெயில்வே போலீசார் மற்றும் துடியலூர் போலீசார் விரைந்து சென்று ரவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். மனைவியை அரிவாளால் வெட்டிய வியாபாரி போலீசுக்கு பயந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.