கர்ப்பிணி பெண் 
செய்திகள்

பெண் அரசு ஊழியர்களுக்கான பேறுகால விடுப்பு 9 மாதத்தில் இருந்து 12 ஆக உயர்வு

பெண் அரசு ஊழியர்களுக்கான பேறுகால விடுப்பு 9 மாதங்களில் இருந்து 12 மாதங்களாக உயர்த்தப்படும் என்றும், இந்த உத்தரவு கடந்த ஜூலை 1-ந்தேதியில் இருந்து அமலுக்கு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மாலை மலர்

சென்னை:

தமிழக தலைமைச்செயலாளர் வெ.இறையன்பு வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 7-ந்தேதி பிறப்பிக்கப்பட்ட அரசாணையின்படி, பெண் அரசு ஊழியர்களுக்கான மகப்பேறு விடுப்பை 180 நாட்களில் இருந்து 270 நாட்களாக (9 மாதங்கள்) உயர்த்தி அரசு உத்தரவிடப்பட்டு இருந்தது. இந்த விடுப்பு நாட்களுக்கு முழு சம்பளமும் வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டது.

இந்த நிலையில் 13-ந்தேதி தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட 2021-22-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், பெண் அரசு ஊழியர்களுக்கான பேறுகால விடுப்பு 9 மாதங்களில் இருந்து 12 மாதங்களாக உயர்த்தப்படும் என்றும், இந்த உத்தரவு கடந்த ஜூலை 1-ந்தேதியில் இருந்து அமலுக்கு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பை கவனத்துடன் அரசு பரிசீலித்து, திருமணமான, 2-க்கும் குறைவாக குழந்தைகளைக் கொண்ட பெண் அரசு ஊழியர்களுக்கான மகப்பேறு விடுப்பு நாட்களை 270 நாட்களில் இருந்து 375 நாட்களாக (12 மாதங்கள்) உயர்த்தி ஆணையிடுகிறது. இந்த விடுப்பு நாட்களில் முழு சம்பளம் வழங்கப்படும். கடந்த ஜூலை 1-ந்தேதிக்கு முன்பும், அந்த தேதிக்குப் பின்னரும் பேறுகால விடுப்பில் இருக்கும் பெண் அரசு ஊழியர்களுக்கும் இந்த உத்தரவு பொருந்தும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.