மரக்காணம்:
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள கரிப்பாளையத்தை சேர்ந்தவர் சாய்ராம் (வயது 50). எலக்ட்ரீசியன். கோணவாயன்குப்பம் கிராமத்தில் விவசாயி
ஒருவருக்கு சொந்தமான நிலத்தில் உள்ள மின்மோட்டார் பழுதானது. அதனை சரிசெய்யும் முயற்சியில் சாய்ராம் ஈடுபட்டார்.
மோட்டாருக்கு மின் இணைப்பு வராததால் அந்த பகுதியில் உள்ள டிரான்ஸ்பார்மர் மீது ஏறி மின் இணைப்பை சரி செய்ய முயன்றார். அப்போது எதிர்பாராத விதமாக
மின்சாரம் தாக்கியதில், டிரான்ஸ்பார்மரில் உடல் கருகி சாய்ராம் பரிதாபமாக இறந்துபோனார். இது குறித்து தகவல் அறிந்த மரக்காணம் போலீசார் மற்றும் மின்துறை
ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் டிரான்ஸ்பார்மருக்கு வரும் மின் இணைப்பை துண்டித்து சாய்ராமின் உடலை மீட்டனர். பின்னர் அவரின்
உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக மரக்காணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.