கொள்ளை 
செய்திகள்

மங்களமேடு அருகே வீட்டில் தூங்கியவர்களிடம் கத்தியை காட்டி 10½ பவுன் நகைகள் பறிப்பு

மங்களமேடு அருகே வீட்டில் தூங்கியவர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி 10½ பவுன் நகைகளை மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.

மாலை மலர்

மங்களமேடு:

பெரம்பலூர் மாவட்டம், மங்களமேடு அருகே உள்ள ஒகளூர் காந்தி நகரை சேர்ந்தவர் பழனிவேல்(வயது 45). விவசாயி. இவரது மனைவி சந்திரா(43). இவர்களுக்கு மீனா, சந்தியா என 2 மகள்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் நேற்று முன்தினம் இரவு தங்கள் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார்கள்.

அப்போது மர்ம நபர்கள் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து வீட்டிற்குள் புகுந்தனர். சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் திடுக்கிட்டு கண் விழித்தனர். அப்போது மர்ம நபர்கள் அவர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி, சந்திராவின் கழுத்தில் கிடந்த 6½ பவுன் தாலிச்சங்கிலி, மீனா, சந்தியா ஆகியோர் அணிந்திருந்த தலா 1½ பவுன் நகைகள் மற்றும் மோதிரம் உள்ளிட்ட 10½ நகைகளை பறித்துக்கொண்டு அங்கிருந்து சென்றனர்.

இதையடுத்து வீட்டில் இருந்தவர்கள் சத்தம் போட்டனர். அதைக்கேட்டு அக்கம், பக்கத்தினர் அங்கு வந்து பார்த்தனர். ஆனால் அதற்குள் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர். இதுகுறித்து பழனிவேல் மங்களமேடு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.