திருட்டு 
செய்திகள்

மணப்பாறை அருகே 23 செம்மறி ஆடுகள் திருட்டு

மணப்பாறை அருகே 23 செம்மறி ஆடுகளை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலை வீசி தேடி வருகிறார்கள்.

மாலை மலர்

மணப்பாறை:

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த கே.உடையாபட்டியைச் சேர்ந்தவர் அருள்ராஜ். இவர் 30 செம்மறி ஆடுகள் மற்றும் மாடுகளை வளர்த்து வருகிறார். அவரது தோட்டத்தில் ஆடுகள் அனைத்தும் பட்டியில் அடைத்து வைக்கப்படுவது வழக்கம். இதே போல் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் 30 ஆடுகளையும் பட்டியில் அடைத்து வைத்து விட்டு சென்று விட்டார்.

பின்னர் அவரது வயலில் நெல் அறுவடை பணிகள் நடைபெற்றதால் அதற்கான பணியில் மும்முரம் காட்டி வந்தார். அந்த பணியை முடித்து விட்டு நேற்று முன்தினம் காலையில் ஆட்டை திறந்து விட சென்று பார்த்த போது 7 குட்டிகள் மட்டுமே இருந்தன. 23 செம்மறி ஆடுகளை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அக்கம் பக்கத்தில் தேடி பார்த்தும் ஆடுகளை காணவில்லை.

அருள்ராஜ் நெல் அறுவடை பணியில் மும்முரம் காட்டி வந்ததை சந்தர்ப்பமாக பயன்படுத்திக் கொண்ட மர்ம நபர்கள் பட்டியில் இருந்த 23 ஆடுகளையும் சப்தமின்றி திருடிச்சென்றது தெரியவந்தது. பின்னர் இதுதொடர்பாக மணப்பாறை போலீசில் அவர் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சமீபகாலமாகவே ஆடுகளை திருடும் சம்பவம் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கின்றது. நள்ளிரவில் கட்டி இருக்கும் ஆடுகளை மர்ம நபர்கள் திருடிச் சென்று உடனே விற்று விடுவதால், அவற்றை கண்டுபிடிப்பதிலும் கடும் சிரமம் ஏற்பட்டுள்ளது. திருடு போன ஆடுகளின் மதிப்பு ரூ.2½ லட்சம் இருக்கும்.