மம்தா பானர்ஜி 
செய்திகள்

மம்தா கோரிக்கையை தேர்தல் கமி‌ஷன் ஏற்க மறுப்பு

வருகிற 22, 26, 29 ஆகிய தேதிகளில் மேற்கு வங்காளத்தில் நடைபெறும் 3 கட்ட தேர்தல்களை சேர்த்து ஒரே கட்டமாக நடத்தும் திட்டம் எதுவும் இல்லை என்று தெரிவித்தார்.

மாலை மலர்

புதுடெல்லி:

294 தொகுதிகளை கொண்ட மேற்கு வங்காள சட்டசபைக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. முதல்கட்ட தேர்தல் கடந்த மாதம் 27-ந் தேதி நடந்தது.

அதன்பிறகு கடந்த 1-ந்தேதி 2-வது கட்ட தேர்தலும், 6-ந்தேதி 3-வது கட்ட தேர்தலும், 10-ந்தேதி 4-வது கட்ட தேர்தலும் நடந்தது. இதுவரை 135 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இன்னும் 159 தொகுதிகளுக்கு 4 கட்டங்களாக தேர்தல் நடைபெற வேண்டும்.

இந்தநிலையில் மேற்கு வங்காளத்தில் நாளை (17-ந்தேதி) 45 தொகுதிகளுக்கு 5-வது கட்ட தேர்தல் நடக்கிறது. அதுபோக வருகிற 22-ந்தேதி 43 தொகுதிகளுக்கும், 26-ந்தேதி 36 தொகுதிகளுக்கும், 29-ந்தேதி 35 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தப்பட வேண்டும். இதற்கிடையே நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. மேற்கு வங்காளத்திலும் கொரோனா தாக்கம் அதிகமாக உள்ளது.

எனவே நாளை தேர்தல் நடந்தபிறகு மீதமுள்ள 3 கட்ட தேர்தல்களையும் சேர்த்து ஒரேகட்டமாக நடத்த வேண்டும் என்று முதல்- மந்திரி மம்தா பானர்ஜி டுவிட்டரில் பதிவிட்டு தேர்தல் கமி‌ஷனுக்கு வேண்டுகோள் வைத்தார்.

இந்தநிலையில் தேர்தல் பிரசாரத்தின் போது கொரோனா விதி முறைகளை அரசியல் கட்சிகள் பின்பற்றுவது குறித்து ஆலோசனை நடத்த தேர்தல் கமி‌ஷன் அனைத்து கட்சிகளுக்கும் இன்று அழைப்பு விடுத்துள்ளது. இந்த அனைத்து கட்சி கூட்டத்தில் மம்தாவின் கோரிக்கை தொடர்பாக விவாதிக்கப்படும் என்று செய்திகள் வெளியாகின.

இந்தநிலையில் மம்தாவின் கோரிக்கையை தேர்தல் கமி‌ஷன் ஏற்க மறுப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தேர்தல் கமி‌ஷன் செய்தித்தொடர்பாளர் கூறுகையில், ‘வருகிற 22, 26, 29 ஆகிய தேதிகளில் மேற்கு வங்காளத்தில் நடைபெறும் 3 கட்ட தேர்தல்களை சேர்த்து ஒரே கட்டமாக நடத்தும் திட்டம் எதுவும் இல்லை’ என்று தெரிவித்தார்.