நாமக்கல்:
நாமக்கல் நடராஜபுரம் 4-வது வீதியில் வசித்து வந்தவர் ஜானகி (வயது 50). இவர் கடந்த 22-ந் தேதி வீட்டில் உள்ள படுக்கை அறையில் படுகொலை செய்யப்பட்டு கிடந்தார். இது குறித்து இவருடைய உறவினர் பாண்டியன் (24) கொடுத்த புகாரின் பேரில் நாமக்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.
இதற்கிடையே ஜானகி வீட்டில் வேலை செய்து வந்த வேலைக்காரி ஜெனிபர் (25) மாயமாகி இருந்தார். எனவே அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. இதனால் போலீசார் அவரை தேடி வந்தனர். அவர் தர்மபுரியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அங்கு விரைந்து சென்ற போலீசார் ஜெனிபரை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் கொலை செய்யப்பட்ட ஜானகி, வேலைக்காரி ஜெனிபரை வெளியே செல்ல விடாமல் வீட்டிலேயே அடைத்து வைத்து கொடுமைப்படுத்தியதும், இதனால் ஆத்திரம் அடைந்த ஜெனிபர், ஜானகியின் முகத்தை தலையணையால் அமுக்கியும், கல்லால் தலையில் தாக்கியும் கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் ஜெனிபரை நேற்று கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட ஜெனிபர் போலீசாரிடம் கொடுத்துள்ள பரபரப்பு வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-
தூத்துக்குடியை சேர்ந்த எனக்கு தாய், தந்தை இல்லை. இதனால் அங்குள்ள ஆதரவற்றோர் இல்லம் ஒன்றில் 18 ஆண்டுகளாக தங்கி இருந்தேன். பின்னர் உறவினர்கள் உதவியுடன் அங்கிருந்து வெளியே வந்த நான், தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டை பகுதியை சேர்ந்த முரளி என்பவரை திருமணம் செய்து கொண்டேன். எங்களுக்கு 6 வயதில் மகன் உள்ளான்.
அவர்களை விட்டு விட்டு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நான் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் நோயாளிகளுக்கு உதவி செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தேன். அப்போது ஜானகி உடல்நலக்குறைவால் அங்கு சிகிச்சை பெற வந்தார். அங்கு எங்கள் 2 பேருக்கும் பழக்கம் ஏற்பட்டது. அந்த பழக்கத்தின் அடிப்படையில் ஜானகி வீட்டில் வேலைக்கு சேர்ந்தேன். என்னை வீட்டிலேயே அடைத்து வைத்து கொண்டு, எனக்கு தர வேண்டிய சம்பளம் ரூ.9,500-ஐ தராமல் கொடுமைப்படுத்தியதால், அவரை கொலை செய்ய திட்டமிட்டேன். அதன்படி கடந்த 22-ந் தேதி மாத்திரை போட்டு விட்டு தூங்கிய ஜானகியின் முகத்தை தலையணையால் அமுக்கி கொலை செய்ய முயன்றேன். இருப்பினும் அவர் உயிர் போகாத காரணத்தால், கல்லால் தலையில் தாக்கி கொலை செய்தேன்.
அவரது தலையில் இருந்து ரத்தம் வந்ததை பார்த்ததும் எனக்கு மயக்கம் வந்துவிட்டது. சிறிது நேரம் கழித்து மயக்கம் தெளிந்ததும், அங்கிருந்து துணிகளை மாற்றிக்கொண்டு ஜானகி காதில் அணிந்து இருந்த ¾ பவுன் தங்கத்தோடு மற்றும் வீட்டில் இருந்த ரூ.4,500, ஹோம் தியேட்டர் ஆகியவற்றை திருடி விட்டு, ஆட்டோவில் தப்பி சென்றேன். ஆனால் போலீசாரிடம் சிக்கி கொண்டேன்.
இந்தநிலையில் திருடப்பட்ட ¾ பவுன் தங்கத்தோடு, ஹோம் தியேட்டர் மற்றும் செல்போன் ஆகியவற்றை போலீசார் மீட்டனர். மேலும் கொலை நடந்த வீட்டிற்கு ஜெனிபரை அழைத்து சென்ற போலீசார் கொலை சம்பவத்தை அரங்கேற்றியது எப்படி? எனவும் விசாரணை நடத்தினர்.