வெள்ளகோவில்:
தஞ்சாவூரை சேர்ந்தவர் முத்துராஜ்(வயது26). இவர் திருப்பூரில் 20 ஆண்டுகளாக தங்கியிருந்து பனியன்கள் ஆர்டர் எடுத்து பட்டன் வைத்து கொடுக்கும் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி கிருபா(24). கிருபாவின் தங்கை பிரியா(17). இவர்களும் திருப்பூரில் தங்கி வேலை பார்த்து வந்தனர்.
கிருபா தனது உறவினர்களை பார்க்க தஞ்சாவூருக்கு செல்ல வேண்டும் என கணவரிடம் கூறியுள்ளார். அதன்படி நேற்று வேலையை முடித்து விட்டு முத்துராஜ் தனது மனைவி மற்றும் அவரது தங்கையுடன் ஊருக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார்.
இவர்களது மோட்டார் சைக்கிள் இரவு 12 மணியளவில் காங்கயம் அருகே திருப்பூர்- கரூர் ரோட்டில் உள்ள பகவதி பாளையம் பிரிவில் சென்று கொண்டிருந்தது.
அப்போது எதிரே அரியலூரில் இருந்து சிமெண்ட் ஏற்றி கொண்டு லாரி வந்தது. இந்த நிலையில் எதிர்பாராத விதமாக லாரி மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. மோதிய வேகத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்த முத்துராஜ், அவரது மனைவி கிருபா, கிருபாவின் தங்கை பிரியா ஆகியோர் தூக்கி வீசப்பட்டனர்.
இதில் தலை, கை, கால்களில் பலத்த காயம் அடைந்த 3 பேரும் உயிருக்கு போராடி கொண்டிருந்தனர்.
சிறிது நேரத்தில் முத்துராஜூம், அவரது மனைவி கிருபாவும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். பிரியா உயிருக்கு போராடினார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக காங்கயம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் காங்கயம் டி.எஸ்.பி. தனராசு, இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்த 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.