விபத்து 
செய்திகள்

காரமடையில் நின்றிருந்த லாரி மீது கார் மோதல்- கேட்டரிங் உரிமையாளர் பலி

காரமடையில் இன்று அதிகாலை நின்றிருந்த லாரி மீது கார் மோதிய விபத்தில் கேட்டரிங் உரிமையாளர் பரிதாபமாக உயிரிழந்தார்.

காரமடை:

திருச்சி பெட்டவாய்த்தலை பகுதியை சேர்ந்தவர் முகுந்த பிரியன் (வயது 31). கேட்டரிங் நடத்தி வந்தார். இவர் இன்று அதிகாலை தனது காரில் மேட்டுப்பாளையத்தில் இருந்து அன்னூர் ரோட்டில் வந்தார்.

அப்போது காரமடை நால்ரோடு தென்திருப்பதி அருகே வந்தபோது கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து அங்கு சாலையோரம் நின்றிருந்த லாரியின் பின்புறம் மோதியது.

இதில் கார், லாரியின் இடையே சிக்கி அப்பளம் போல் நொறுங்கியது. இடிபாட்டில் சிக்கி கொண்ட முகுந்த பிரியன் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து அங்கு இருந்தவர்கள் காரமடை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இடிபாட்டில் சிக்கி இருந்த முகுந்த பிரியனின் உடலை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து லாரியை ரோட்டோரம் நிறுத்தி இருந்த நீலகிரியை சேர்ந்தது டிரைவர் ரவிச்சந்திரன் (34) என்பவரை பிடித்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.