கொரடாச்சேரி:
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் ஒன்றியம் ஆதனூர் மண்டபத்தை சேர்ந்தவர் அருள்செல்வம்(வயது33). விவசாயியான இவர் நேற்று முன்தினம் தனது மோட்டார் சைக்கிளில் திருவாரூரிலிருந்து நீடாமங்கலம் நோக்கி சென்றாா். அம்மையப்பன் அருகே உள்ள ஓச்சேரி என்ற பகுதியில் அவர் சென்றபோது எதிரே வந்த லாரி அருள்செல்வம் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது வேகமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அருள்செல்வம் தலையில் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடினார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அருள் செல்வம் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து அருள் செல்வத்தின் மனைவி ஜெயசித்ரா கொரடாச்சேரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரியை ஓட்டி வந்த திருவாரூரைசேர்ந்த முத்து குமரவேல்(48) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.