விபத்து 
செய்திகள்

உளுந்தூர்பேட்டை அருகே லாரி மோதி சர்க்கரை ஆலை மேற்பார்வையாளர் பலி

உளுந்தூர்பேட்டை அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் சர்க்கரை ஆலை மேற்பார்வையாளர் பரிதாபமாக உயிரிழந்தார்.

மாலை மலர்

உளுந்தூர்பேட்டை:

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பிள்ளையார்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன் மகன் கார்த்திக்ராஜா(வயது 28). என்ஜினீயரான இவர் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள செங்கல்வராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் தற்காலிக மேற்பார்வையாளராக பணி புரிந்து வருகிறார். சம்பவத்தன்று கார்த்திக் ராஜா தனது நண்பர்களுடன் மோட்டார் சைக்கிளில் உளுந்தூர்பேட்டையில் இருந்து பிள்ளையார்குப்பம் நோக்கி சென்று கொண்டிருந்தார். 

உளுந்தூர்பேட்டை கீரி அம்மன் வளைவு அருகே வந்த போது அந்த வழியாக வந்த லாரி கார்த்திக் ராஜா ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கார்த்திக்ராஜா சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக இறந்தார். 

இந்த விபத்து குறித்து உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.