தர்மபுரி:
தர்மபுரி மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சி பொது பணியாளர்கள், கிராம ஊராட்சி, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள், துப்புரவு மற்றும் தூய்மை பணியாளர் சங்கங்கள் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு உள்ளாட்சி பணியாளர்கள் சங்க மாவட்ட தலைவர் மனோகரன் தலைமை தாங்கினார்.
சங்க மாநில தலைவர் ஆறுமுகம் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். இதில் சங்க மாநிலக்குழு உறுப்பினர் ராமமூர்த்தி, ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட தலைவர் மாதேஸ்வரன், மாவட்ட பொது செயலாளர் மணி, மண்டல பொது செயலாளர் நாகராஜன், மாவட்ட நிர்வாகி நடராஜன், கட்டுமான தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் சுதர்சனன் உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.
7-வது ஊதியக்குழு பரிந்துரைப்படி ஊதிய உயர்வு நிலுவை தொகையை உடனடியாக வழங்க வேண்டும். புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து மீண்டும் பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் திடக்கழிவு தூய்மை பணியாளர்கள், தூய்மை காவலர்களை நிரந்தரப்படுத்தி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.
குறைந்த பட்ச ஊதிய சட்டத்தை அமல்படுத்த வேண்டும். மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்களுக்கு முறையான ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு ஓய்வூதியம் தலா ரூ.3,500 வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் உள்ளாட்சி பணியாளர்கள், சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து ெகாண்டனர்.