தமிழக தடகள வீரர் ஆரோக்கியராஜீவ் ஓடியதை அவரது குடும்பத்தினர் கண்டுகளித்தபோது எடுத்தபடம். 
செய்திகள்

ஒலிம்பிக் போட்டியில் லால்குடி வீரர் பங்கேற்ற 400 மீட்டர் தொடர் ஓட்டம் - குடும்பத்தினர், ரசிகர்கள் ஏமாற்றம்

ஒலிம்பிக் போட்டியில் லால்குடி வீரர் பங்கேற்ற 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்ததால் குடும்பத்தினர், ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

லால்குடி:

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள வழுதியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சவுந்தரராஜன் - லில்லிசந்திரா தம்பதியினர் மூத்த மகன் ஆரோக்கியராஜீவ்(வயது 30). தடகள வீரரான இவர் சர்வதேச விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கங்கள் பெற்றுள்ளார். கடந்த ஆண்டு குடியரசுத் தலைவரால் அர்ஜுனா விருது இவருக்கு வழங்கப்பட்டது.

தொடர்ந்து இரண்டாவது முறையாக ஒலிம்பிக் போட்டியில் இவர் கலந்து கொண்டுள்ளார். கலப்பு 400 மீட்டர் தொடர் ஓட்டப் பந்தயத்தில் இவர் கலந்துகொண்டு விளையாடினார். இதில் துரதிர்ஷ்டவசமாக வெற்றி பெறும் வாய்ப்பை இழந்தார்.

இந்தநிலையில் நேற்று நடைபெற்ற ஆடவருக்கான 400 மீட்டர் தொடர் ஓட்டப்பந்தய தகுதி சுற்று போட்டியில் கலந்துகொண்ட ஆரோக்கியராஜீவ் அணி 4-வது இடத்தை பெற்றது. மேலும் தங்களுக்கான புள்ளிகள் அடிப்படையிலான இறுதிப்போட்டி வாய்ப்பை எதிர்பார்த்திருந்த இந்திய அணிக்கு ஏமாற்றமே மிஞ்சியது.இதனால் ஆரோக்கியராஜீவின் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மிகுந்த சோகத்துடன் காணப்பட்டனர். தொடர்ந்து 2-வது முறையாக ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ளும் வாய்ப்பை பெற்ற ஆரோக்கியராஜீவ் இந்த முறை கண்டிப்பாக ஏதாவது ஒரு பதக்கத்துடன் திரும்புவார் என எதிர்பார்த்திருந்த அவரது ரசிகர்கள், நண்பர்கள், குடும்பத்தினர் இதனால் ஏமாற்றமடைந்தனர்.

இதுகுறித்து அவரது தாய் கூறுகையில், எனது மகன் இந்திய அளவில் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டிருப்பது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. அதிலும் தொடர்ந்து 2-வது முறையாக கலந்து கொள்வது பெருத்த மகிழ்ச்சியை உண்டாக்கியது. இந்த முறை எப்படியும் பதக்க பரிசுடன் நாட்டிற்கு பெருமை சேர்த்து திரும்புவார் என்று எதிர்பார்த்து இருந்தோம். கலப்பு பிரிவில் பதக்கம் பெறும் வாய்ப்பை இழந்தாலும், ஆடவர் பிரிவில் 4-வது இடத்தை அடைந்ததால் இறுதிப்போட்டிக்கு புள்ளிகள் அடிப்படையில் முன்னேறுவார் என்று எதிர்பார்த்து இருந்தோம். துரதிர்ஷ்டவசமாக இறுதிப்போட்டிக்கு நுழையும் வாய்ப்பை இழந்தது மிகுந்த வருத்தம் அளிக்கிறது. மேலும் அடுத்த முறை நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணிக்காக கலந்துகொண்டு எப்படியும் பரிசு பெறுவார் என்ற நம்பிக்கையில் உள்ளதாக கூறினார்.