சென்னை:
தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் ‘தினத்தந்தி’ நிருபருக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது முருகனிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி:-அ.தி.மு.க. கூட்டணியுடன் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை எப்போது நடைபெறும்?
பதில்:- அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி நல்லவிதத்தில், உறுதியாக நீடிக்கிறது. தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை குறித்த அறிவிப்பு கட்சித் தலைமையின் அனுமதி பெற்று விரைவில் வெளியிடப்படும்.
கேள்வி:- அ.தி.மு.க. கூட்டணியில் எத்தனை இடங்களை கேட்டுப்பெற பா.ஜ.க. திட்டமிட்டுள்ளது?
பதில்:- அதை கூட்டணி தலைவர்கள் அமர்ந்து பேசி முடிவு எடுப்போம். தேர்தல் தேதி அறிவிக்கட்டும். பின்னர் அதற்கான வேலைகள் நடக்கும்.
கேள்வி:- தமிழகத்தில் என்னென்ன கொள்கை, குறிக்கோள்களை முன்வைத்து பா.ஜ.க. பிரசாரத்தில் ஈடுபட உள்ளது?
பதில்:- மத்திய அரசு எத்தனையோ நல்ல திட்டங்களை தமிழகத்துக்கு அளித்துள்ளது. ஒவ்வொரு வீட்டிலும் மத்திய அரசின் திட்டத்தால் பயனடைந்தவர்கள் நிச்சயம் இருக்கிறார்கள். அதேபோல மாநில அரசு ஏராளமான திட்டங்களை மக்களுக்காக மேற்கொண்டுள்ளது. அந்தவகையில் மத்திய-மாநில அரசின் திட்டங்கள், சாதனைகளை முன்னெடுத்து பிரசாரத்தில் ஈடுபடுவோம். அதேபோல இளைஞர்கள் வளர்ச்சி, உள்கட்டமைப்பு, மகளிர் மேம்பாடு, பட்டியலின மக்களுக்கான அடிப்படை வசதிகள், தேவைகள், தொழில்துறை மேம்பாடு உள்ளிட்டவற்றை குறிக்கோள்களாக முன்வைத்து பிரசாரம் மேற்கொள்வோம்.
கேள்வி:- பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கை எப்போது வெளியாகும்?
பதில்:- எச்.ராஜா தலைமையிலான பா.ஜ.க. தேர்தல் அறிக்கை குழுவினர் தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக சென்று மக்களை சந்தித்து கருத்துகளை கேட்டு வருகிறார்கள். அதன் அடிப்படையில் பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கை விரைவில் வெளியாகும்.
கேள்வி:- பா.ஜ.க.வில் நிறைய பிரபலங்கள் இணைந்துவருகிறார்கள். சட்டமன்ற தேர்தலில் போட்டியிட அவர்களுக்கு வாய்ப்பு தரப்படுமா?
பதில்:- கட்சிக்கு புதிதாக வந்தவர்கள், ஏற்கனவே இருக்கிறவர்கள் என்ற பேதமெல்லாம் எங்களுக்கு இல்லை. கட்சிக்கு உண்மையாக உழைப்போருக்கு உரிய அங்கீகாரம் நிச்சயம் கிடைக்கும்.
கேள்வி:- தமிழக அரசியலில் சசிகலா தாக்கத்தை ஏற்படுத்துவாரா? சசிகலா வருகை தொடர்பாக அ.தி.மு.க.வின் பார்வை என்ன?
பதில்:- சசிகலா தனது நிலைப்பாட்டை முதலில் அறிவிக்கட்டும். அதன்பிறகுதான் அது தாக்கத்தை ஏற்படுத்துமா என்று சொல்லமுடியும். மற்றபடி, அ.தி.மு.க.வின் உள்கட்சி விவகாரங்களில் நான் தலையிட முடியாது.
கேள்வி:- தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினின் பிரசாரத்தை எப்படி பார்க்கிறீர்கள்?
பதில்:- மக்களை ஏமாற்றும் அரசியலை தி.மு.க. செய்துவருகிறது. நாங்கள் ‘வேல்’ தூக்கி யாத்திரையில் ஈடுபட்டபோது எங்களை கிண்டல் செய்த தி.மு.க.வினரே இப்போது பிரசாரத்தில் ‘வேல்’ தூக்கியிருக்கிறார்கள். ஓட்டுக்காக ‘வேல்’ தூக்கி திரியும் அவர்களின் போலி நாடகத்தை மக்கள் நம்பமாட்டார்கள். தி.மு.க. ஆட்சியில் நடந்த ஊழல்கள், அராஜகங்கள், கட்டப்பஞ்சாயத்துகளை மக்கள் அவ்வளவு எளிதில் மறந்துவிட மாட்டார்கள். எனவே ஸ்டாலினின் போலி பிரசாரங்கள் வாக்காளர்களிடம் எடுபடாது.’
இவ்வாறு எல்.முருகன் பதில் அளித்தார்.